நஜிப்: பிஎன் மேம்பாட்டுத் திட்டம் மேலானது

பாரிசான் நேசனலின் மேம்பாட்டுத் திட்டம் மாற்றுக்கட்சியினரின் மேம்பாட்டுத் திட்டத்தைவிட சிறந்தது, மேலானது என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்.

மாற்றுக்கட்சியினர், ஆட்சி செய்வதில் அனுபவம் அற்றவர்கள். பிஎன்னைக் காட்டிலும் அவர்களின் கூட்டணி சிறந்தது என்பதை அவர்கள் நிரூபிக்கவில்லை. பிஎன்னுக்கு 50ஆண்டுகள் ஆட்சி செய்த அனுபவம் உண்டு என்றாரவர்.

காலங்கள் மாறினாலும் பிஎன் கொள்கையில் மாற்றமில்லை. பிரதமர், இன்று தெலுக் இந்தானில் ‘ஒரு காலைப் பொழுதில் பிரதமருடன் என்ற நிகழ்வில் 10,000பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசினார்.

“முன்பு நாங்கள் வேறு மாதிரி  செயல்பட்டோம். இப்போது செயல்படும் விதம் மாறியுள்ளது. கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை.

“அரசாங்கத்தில் தொடர்ச்சி இருக்க வேண்டும்.தொடர்ச்சி இல்லையென்றால் நீண்டகாலத் திட்டங்களைப் போட இயலாது”, என்று நஜிப் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தை மாற்றுவது உணவை மாற்றுவது போன்றதல்ல.

“நல்ல எதிர்காலத்தைக் கொண்ட வளரும் நாடான நமக்குத் தொடர்ச்சி தேவை அதிகாரம் வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. பிஎன் ஆட்சியில் மக்கள் மேலும் அதிக நன்மை பெற வேண்டும் என்பதற்காகவே சொல்கிறேன்”.

மாற்றரசுக் கட்சி அரசாங்கத்தை வெறுக்கச் சொல்லி மக்களைத் தூண்டிவிட்டு வருவதாக அவர் சொன்னார். ஜனநாயகம் என்பது வெறுப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல.மேலான திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது.

பேராவுக்குப் பெரிய திட்டங்கள்

2013 பட்ஜெட் ஒரு தேர்தல் பட்ஜெட் என்று கூறப்படுவதை அவர் மறுத்தார். அது உண்மையாயின் இப்போது கொடுக்கப்பட்டதைவிட இன்னும் கூடுதலாக சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கும் என்றார்.

“எங்கள் பட்ஜெட் ஒரு பொறுப்பான பட்ஜெட். பன்னாட்டு அல்லது உள்நாட்டு ஆய்வாளர் எவரும் அதை நம்பிக்கையற்ற பட்ஜெட் என்றோ பொறுப்பற்ற பட்ஜெட் என்றோ சொன்னதில்லை.

“ஆனால், மாற்றரசுக் கட்சியின் பட்ஜெட்டை ஆய்வாளர்கள் குறைகூறியுள்ளனர். அதில் நம்பகத்தன்மை இல்லை என்பதால் அதை ஆராய்வதற்குக்கூட அவர்கள் முற்படவில்லை”.

பேராக்கின் வளர்ச்சிக்கு பிஎன் அரசு பெரிய பெரிய திட்டங்களை வைத்திருப்பதாக பிரதமர் கூறினார். மேற்குக் கரை நெடுஞ்சாலைத் திட்டம் பாகான் டத்தோ, தெலுக் இந்தான் ஆகிய பகுதிகளில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டுவரும்.

“நெடுஞ்சாலைத் திட்டம் இன்னும் சில ஆண்டுகளில் உருப்பெறும். அதன்பின் தெலுக் இந்தான் போன்ற நகரங்கள் விரைவான வளர்ச்சி காணும்”, என்றார்.

அந்நிகழ்வில் பேராக் மந்திரி புசார் ஜம்ரி அப்துல் காடிர், தற்காப்பு அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, பிரதமர்துறை அமைச்சர் ஜி.பழனிவேல் முதலானவர்களும் கலந்துகொண்டனர்.

-பெர்னாமா

 

TAGS: