சம்பள வெட்டுத் தீர்மானம் நிலை ஆணைகளைக் ‘கேலி’ செய்வதுபோல் உள்ளது

அமைச்சர்களின் சம்பளத்தை வெட்ட வேண்டும் என்று மாற்றரசுக் கட்சி எம்பிகள் மூவர் கொண்டுவந்த தீர்மானங்களை அனுமதிக்க மறுத்த மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, அடையாள சம்பள வெட்டுகள் நிலைஆணை 66(9)-ஐ “கேலி செய்வதுபோலவும் மீறுவதுபோலவும்” உள்ளன என்றார்.

அப்படியொரு தீர்மானம் மக்களவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அதன் விளைவாக சட்ட பிரச்னைகளும் எழலாம் என்று பண்டிகார் கூறினார். ஒரு அமைச்சரின் சம்பளம் அவருக்கே உரியதாகும். அதில் மக்களவை கைவைக்க உரிமை இல்லை.

சொந்தமாக செய்த ஆய்வுகளின் அடிப்படையிலும் மற்ற வெஸ்ட்மின்ஸ்டர்-பாணி நாடாளுமன்றங்களில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றியும் அம்முடிவுக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.