ஹரியானாவில் அதிகரிக்கும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்

வட இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் அண்மைக் காலமாக கொடூரமான முறையில் நடந்துவருகின்ற பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளன.

கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே இம்மாநிலத்தில் 11 பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்கள் நடந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பெண்கள் மீதான இந்த பாலியல் தாக்குதல்கள் தொடர்பில் மரபுசார் கிராம மன்றங்கள் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துகள் பெண்ணுரிமைக் குழுக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.

கும்பல்களால் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்படுகின்ற இம்மாதிரியான சம்பவங்களைத் தவிர்க்க பெண்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்பது போன்ற கருத்துகளை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

அரைகுறை ஆடைகளுடன் பெண்களின் படங்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வருவதே இந்நிலைக்கு காரணம் என்கிறார் கிராமத்து பெரியவர் ஒருவர்.

சமுதாயத்தில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றிய விதிகளை கிராமத்துப் பெரியவர்கள் வகுக்கும் நிலை கிராமங்களில் நீடிப்பதை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது என்று ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்

ஆனால் ஓட்டுக்காக வேண்டி அரசியல்வாதிகள் கிராமத்து பெரியவர் மன்றங்களை கட்டுப்படுத்தத் தவறுகிறார்கள் என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கிராமத்துப் பெரியவர்களின் அதிகாரத்தை அரசியல்வாதிகள் கட்டுப்படுத்த வேண்டுமெனக் கோரி பெண்கள் ஆர்ப்பாட்டங்களைச் செய்துள்ளனர்.

ஆனால் கிராம பஞ்சாயத்துகளின் அதிகாரங்கள் குறைப்பதென்பது அவர்களுக்கு சுலபமானக் காரியமாக இருக்கப்போவதில்லை.

TAGS: