இப்ராஹிம் அலி: மலேசியாகினியை பெர்க்காசா புறக்கணிக்கும்

செய்தி இணையத் தளமான மலேசியாகினியிடம் பெர்க்காசா உறுப்பினர்கள் பேசக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த இணையத் தளம் செல்வந்தரான ஜார்ஜ் சோரோஸுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறப்படுவதே அதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது.

மலேசியாகினியைப் புறக்கணிக்கும் அறிவிப்பை பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி நேற்று விடுத்ததை அவருக்கு அணுக்கமாக உள்ள வட்டாரங்கள் இன்று உறுதிப்படுத்தின.

“ஆம். பெர்க்காசா அந்த அறிக்கையை மறுக்கா விட்டால் அது உண்மை தான்,” என மலேசியாகினி தொடர்பு கொண்ட போது அந்த வட்டாரம் தயக்கத்துடன் கூறியது. மேல் விவரங்களை அந்த வட்டாரம் கொடுக்கவில்லை.

“மலேசியாகினிக்கு பெர்க்காசா உறுப்பினர்கள் அறிக்கைகளை வழங்குவது ஹராம்,” என பாசிர் மாஸ் எம்பி-யான இப்ராஹிம் சொன்னதாகக் கூறப்படுகின்றது.

“நாங்கள் ஏதாவது ஒன்றைச் சொல்கிறோம். அது வேறு எதனையோ வெளியிடுகிறது. 13வது பொதுத் தேர்தல் வரையில் நாங்கள் அதனைப் புறக்கணிப்போம்,” என அவர் சொன்னதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஷா அலாமில் நேற்று மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சிலாங்கூர் பெர்க்காசாவின் சிறப்பு ஆண்டு மாநாட்டில் பேசிய போது இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.

அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கத்துடன் சோரோஸ் மலேசியாகினிக்கு நிதி அளிப்பதாக கூறப்படுகிறது என பிஎன் ஆதரவு ஊடகங்களும் இணைய எழுத்தர்களும் வலியுறுத்தி வருவதை இப்ராஹிமும் தமது உரையில் குறிப்பிட்டார்.

ஆனால் சோரோஸை  முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டும் நடப்புப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சந்தித்ததை முக்கிய நாளேடுகள் மறைத்து வருகின்றன.

ஸ்கார்ப்பின் ஊழல் மீது மனித உரிமைப் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாராமை இழிவுபடுத்தும் இயக்கத்தின் ஒரு பகுதியாக சோரோஸ் தொடர்புகள் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன.

சோரோஸின் திறந்த சமூக அற நிறுவனத்திடமிருந்து சுவாராம் பணம் பெற்றதாக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா குறை கூறி வருகின்றது. அதனைத் தொடர்ந்து ஆளும் கட்சிக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியே ஸ்கார்ப்பின் விசாரணை என்றும் அது கூறிக் கொண்டது.

மலேசியாகினி செய்தி இணையத் தளத்தின் சிறுபான்மை பங்குதாரர்களில் ஒன்றான MDLF சோரோஸ் நிதியிலிருந்து நன்கொடைகளைப் பெறுவதால் அந்தச் சர்ச்சையில் அதுவும் பிணைக்கப்பட்டது.