இசி தலைவரின் “வெட்கம்கெட்ட” கூற்று:பாஸ் சாடல்

உலகில் தப்புதவறு இல்லாத தூய்மையான வாக்காளர் பட்டியல் எங்கும் இல்லை என்று கூறியதற்காக தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் “வெட்கப்பட வேண்டும்” என்றும் அவர் பிரச்னைக்கான காரணத்தை ஆராயவில்லை என்றும் பாஸ் உதவித் தலைவர் மாஃபுஸ் ஒமார் கூறினார்.

“அப்படிக் கூறியதற்காக வெட்கப்பட வேண்டும். ஒரு சுயேச்சை அமைப்பான இசி-இன் தலைவர் அப்படிக் கூறியிருக்கக் கூடாது. மாறாக, பிரச்னைகளை ஆராய்ந்து வாக்காளர் பதிவும் தேர்தலும் நல்ல முறையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்”, என்றாரவர். 

வாக்காளர் பட்டியலில் பிரச்னை இல்லை.தேர்தல் நடைமுறையைத் தவறாக பயன்படுத்திக்கொள்ளும் தரப்புகளால்தான் பிரச்னை.

“சில தரப்புகள் தேர்தல் நடைமுறையையும் வாக்காளர் பட்டியலையும் நாறடிக்க முயல்வதுதான் இப்போது பிரச்னையாக உள்ளது”, என்று மாவுஸ் குறிப்பிட்டார்.

மாஃபுஸின் கருத்தையே, அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மானும் எதிரொலித்தார். வாக்காளர் பட்டியலில் காணப்படும் முறைகேடுகளைச் சரிசெய்ய ஆணையம் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்றவர் சாடினார்.

இசி தலைவர் “தொழில்நுட்பத் தவறுகள்” என்று பழி போடுகிறாரே தவிர அவை நிகழ்ந்ததற்கான காரணங்களை ஆராய முயலவில்லை என்று துவான் இப்ராகிம் கடிந்து கொண்டார்.

இது, தேர்தல் நடைமுறையை மேம்படுத்துவதில் ஆணையத்துக்கு உண்மையில் ஆர்வம் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது என்றாரவர்.