மலேசியா சமயச் சார்பற்ற நாடும் அல்ல இஸ்லாமிய நாடும் அல்ல, ஊழல் மலிந்த நாடு

மலேசியா சமயச் சார்பற்ற நாடும் அல்ல முழுமையான இஸ்லாமிய நாடும் அல்ல என நஸ்ரி அஜிஸ் சொல்கிறார். ஆனால் பாகுபாடான கொள்கைகளைப் பின்பற்றும் ஊழல் மலிந்த நாடு என்ற தோற்றத்தை நாம் பெற்றுள்ளோம்.

நஸ்ரி: மலேசியா சமயச் சார்பற்ற நாடாக தோற்றுவிக்கப்படவும் இல்லை. அங்கீகரிக்கப்படவும் இல்லை.

டெலிஸ்டாய்: அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் அவர்களே, ‘சமயச் சார்புடைய நாடு, சமயச் சார்பு இல்லாத நாடு என ஒன்றுமில்லை’. ஒன்று நீங்கள் கர்ப்பிணியாக இருக்க வேண்டும் அல்லது இல்லாமல் இருக்க வேண்டும். தயவு செய்து தீர்க்கமாக முடிவு செய்யுங்கள்.

கர்மா: இது எல்லாம் 13வது பொதுத் தேர்தல் சம்பந்தப்பட்டது. புகழ் பெற்ற வழக்குரைஞர் விகே லிங்கத்தைப் போன்று நேரத்திற்கு தகுந்தால் போல அம்னோ பேசிக் கொண்டிருக்கிறது.

பெரும்பான்மை வாக்குகள் மலாய் முஸ்லிம்கள் கரங்களிடம் இருப்பதால் மலேசியா இஸ்லாமிய நாட்டைப் போன்று தோற்றத்தை அளிப்பது எனச் சொல்வதே நல்லது. ஆனால் அது இஸ்லாமிய நாடும் அல்ல. சமயச் சார்பற்ற நாடும் அல்ல.

அதே வேளையில் டிஏபி மலேசியா சமயச் சார்பற்ற நாடு எனத் தெளிவாக காலம் காலமாகச் சொல்லி வருகிறது.

அடையாளம் இல்லாதவன்#18452573: 1956ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி ரெய்ட் ஆணையத்திடம் கூட்டணி சமர்பித்த மனுவில் சமயங்கள் சம்பந்தப்பட்ட பிரிவு இவ்வாறு கூறுகிறது.

” மலேசியாவின் சமயம் இஸ்லாமாக இருக்க வேண்டும். அந்தக் கோட்பாடு, முஸ்லிம் அல்லாத மற்ற குடிமக்கள் தங்கள் சொந்த சமயத்தைப் பின்பற்றுவதற்கு தடையையும் விதிக்கக் கூடாது. நாடு, சமயச் சார்பற்ற நாடு அல்ல என்ற தோற்றத்தையும் தரக் கூடாது.”

“தாங்கள் முஸ்லிம் நாட்டை உருவாக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் மலாயா சமயச் சார்பற்ற நாடாக இருக்கும் என்றும்” கூட்டணித் தலைவர்கள் 1957ம் ஆண்டு மே மாதம் லண்டன் மாநாட்டில் அளித்த வாக்குறுதிக்கு காலனித்துவ அலுவலகம் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.” (கான் பிங் சியூ, 2009ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி நட்கிராப் பத்திரிக்கையில் ஆசிரியருக்கு கடிதங்கள்)

அய்யய்யோ: இந்த நாட்டின் பிரச்னையே இது தான். அதுவும் இல்லை. இதுவுமில்லை. முழுக்க முழுக்க முரண்பாடுகள். இந்த நாடு இஸ்லாமிய நாடு அல்ல. ஆனால் சமயச் சார்பற்ற நாடு அல்ல. மலாய் மொழியில் கற்றுக் கொடுங்கள் அல்லது ஆங்கிலத்தில் போதியுங்கள். அதிகாரத்துவ அரசாங்கக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை. ஆனால் இனவாதம் தெரிகிறது.

சமயச் சுதந்தரம் உண்டு. ஆனால் மற்ற மதங்களை இழிவுபடுத்தலாம். இவ்வாறு பட்டியல் நீளுகிறது. அமைச்சர்கள் தீர்க்கமாக முடிவு செய்ய வேண்டும். அப்போது தான் நாம் முன்னேற முடியும்.

ஸ்விபெண்டர்: மலேசியா சமயச் சார்பற்ற நாடும் அல்ல. முழுமையான இஸ்லாமிய நாடும் அல்ல. ஆனால் 55 ஆண்டுகளாக அம்னோ வழி நடத்தும் அரசாங்கத்தில் பாகுபாடான கொள்கைகளைப் பின்பற்றும் ஊழல் மலிந்த நாடு என்ற தோற்றத்தை நாம் பெற்றுள்ளோம்.

“இன, சமய மேலாண்மையை வலியுறுத்தி அதே வேளையில் ஊழலை எதிர்த்துப் போராட மறுக்கும் வலுவான இஸ்லாமிய பின்னணியைக் கொண்ட போலியான ஜனநாயக நாடு” என நாம் சொல்லலாமா ?”

அடையாளம் இல்லாதவன் -4031: நஸ்ரி அவர்களே, அந்த விவகாரம் மீது லிம் கிட் சியாங் செய்வதைப் போன்று மேற்கோள்களுடன் வாதம் புரியுங்கள். உங்களிடம் ஆதாரம் ஏதும் உள்ளதா ? அல்லது தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறீர்களா ?

இஸ்லாமியப் பண்புகளைப் பின்பற்றுவது இஸ்லாமிய நாட்டிலிருந்து வேறுபட்டது. உங்களுக்கு ஹுடுட் மீதும் ஷாரியா மீதும் நம்பிக்கை இருந்தால் ஏன் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது ஷாரியா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டியிருக்கக் கூடாது ?

இரட்டை வேடம் வேண்டாம். நீங்கள் இஸ்லாமியப் பண்புகளைப் போதித்துக் கொண்டு சமயச் சார்பற்ற சட்டத்தை பின்பற்றக் கூடாது. ஷாரியா சட்டத்தின் கீழ் போலீசாருக்குப் போதுமான ஆதாரம் இல்லை என்றால் அதற்கு என்ன செய்வது ?

தெளிவான ஆதாரங்களைக் காட்டுங்கள். நாம் ‘இஸ்லாமிய நாடு’ எனக் கூறும் வார்த்தைகள் கூட்டரசு அரசமைப்பில் காணப்படவே இல்லை.

அர்ச்சன்: நாம் சமயச் சார்பற்ற நாடாக இருந்தாலும் அல்லது இஸ்லாமிய நாடாக இருந்தாலும் ஊழல் அரசியல்வாதிகள் நல்ல முறையில் நடந்து கொள்வர் என நீங்கள் எண்ணுகின்றீர்களா ? திருடர்கள் திருடர்கள் தான். அவர்கள் இறைவனுக்கு அஞ்சுவதில்லை. அதே வேளையில் வெட்கமும் இல்லாதவர்கள்.

வீரா: நாம் சமயச் சார்பற்ற நாடும் அல்ல இஸ்லாமிய நாடும் அல்ல என நஸ்ரி சொல்கிறார். அப்படி என்றால் நாம் யார் ? குழம்பிப் போன நாடா ?

பூமிஅஸ்லி: சமயச் சார்பற்ற நாடோ இல்லையோ அந்தக் கோமாளிகள் ஒருவர் சொல்வதை மற்றவர்கள் மறுத்துக் கொண்டு வட்டம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆகவே நடப்பு சூழ்நிலையை வருணிக்க ‘வட்டமான’ நாடு என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

ரெத்னம்: நாம் சமயச் சார்பற்ற நாடா அல்லது இஸ்லாமிய நாடா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ‘நாம் ஊழல் மலிந்த நாடு’

TAGS: