தொல்லை கொடுப்பதை உடனே நிறுத்துக: பெர்சே வலியுறுத்து

பெர்சே இயக்கக்குழு உறுப்பினர்கள் தங்களில் எண்மர் விமான நிலையங்களில் குடிநுழைவுத் துறை அதிகாரிகளால்  “தேவையில்லாமல் நிறுத்தப்பட்டு தங்கள் பயணம் தாமதப்படுத்தப்பட்டதை”க் கண்டித்துள்ளனர்.

அதன் தொடர்பில் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாருக்கும் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மட்டுக்கும்  திறந்த மடல் ஒன்றை எழுதிய அவர்கள், அதில் ஆகக் கடைசியாக சாபா-வில் பிறந்தவரான அஹ்மட் ஷுக்ரி அப் ரசாக் (இடம்), அக்டோபர் 21-இல், சொந்த மாநிலத்துக்குள் அடியெடுத்து வைக்க முடியாதபடி கோத்தா கினாபாலு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தைக் கவனப்படுத்தி இருந்தார்கள்.

அதை “வழக்கத்துக்கு மாறான” ஒரு சம்பவம் என்று வருணித்த பெர்சே குழு, “சாபா குடிமகனான ஒருவர் சொந்த மாநிலத்துக்குத் திரும்பிச் செல்ல முடியாதபடி தடுக்கப்பட்டதற்கு அதிகாரிகள் உடனடி விளக்கம்  அளிக்க வேண்டும் என்று கோருகிறோம். அப்படித் தடுத்து நிறுத்த காரணம் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.

“இந்த ஆகக் கடைசி சம்பவம், நாட்டில் நிர்வாகத்துறை, நியாயமற்ற முறையிலும் மனம்போன போக்கிலும்   நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பழக்கம் பரவி வருவதைக் காண்பிக்கிறது.  சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் கிழக்கு மலேசியா செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

“சில பெயர்களைக் குறிப்பிடுவதாக இருந்தால், பெர்சே 2.0 இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், குழு உறுப்பினர்கள் வொங் சின் ஹுவாட், மரியா சின் போன்றோர் சரவாக் செல்ல அனுமதிக்கப்படவில்லை”, என்று அந்த கடிதம் கூறிற்று.