அன்வார் மலாய் எதிர்ப்பு திட்டத்தைக் கொண்டிருந்தார் என சனுசி சொல்வது ‘உண்மை அல்ல’

பிகேஆர் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான அன்வார் இப்ராஹிம் வங்கித் தொழில் துறையில் ‘மலாய் திட்டத்தை’ முறியடித்து விட்டார் என முன்னாள் அமைச்சர் சனுசி ஜுனிட் கூறிக் கொள்வது உண்மையல்ல என பிகேஆர் தெரிவித்துள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஜைனுடின் உட்பட மலாய்த் தலைவர்கள் மலாய் அல்லாத வங்கிக் குழுமம் எனக் கூறப்படும் Alliance Finance Group Bhd (AFG) -ல் பெரும் பங்குகளை வைத்திருப்பதிலிருந்து அது தெளிவாகத் தெரிகிறது என பிகேஆர் தொடர்புப் பிரிவு இயக்குநர் நிக் நஸ்மி நிக் அகமட் கூறினார்.

” ஒரு வேளை சனுசி சொல்லும் மலாய் திட்டம் Konsortium Perkapalan Berhad (KPB)-டை காப்பாற்றுமாறு பெட்ரோனாஸுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது போல அம்னோ அல்லது பாரிசான் நேசனல் சேவகர்களுடைய நலன்களைப் பாதுகாப்பது என்னும் அர்த்தத்தைக் கொண்டிருக்கலாம்,” என அவர் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.

1997ம் ஆண்டு நிதி நெருக்கடியின் போது அந்த Konsortium Perkapalan Berhad, 2 பில்லியன் ரிங்கிட் இழப்பை எதிர்நோக்கியதைத் தொடர்ந்து பெட்ரோனாஸ் அதனை மீட்டது. அந்த நடவடிக்கையை தடுப்பதற்கு அன்வார் முயற்சி செய்ததாக நிக் நஸ்மி கூறிக் கொண்டார்.

Konsortium Perkapalan Berhad அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் புதல்வர் மிர்ஸான் மகாதீருக்கு சொந்தமானதாகும்.

Alliance Finance Group Bhd என்ற வங்கிக் குழுமத்துடன் டைம்-க்கு நீண்ட காலமாக உறவுகள் இருப்பதாகவும் நிக் நஸ்மி குறிப்பிட்டார். அதில் டைம்-உடன் தொடர்புடைய Langkah Bahagia Sdn Bhdக்கு 14.8 விழுக்காடு பங்குகள் உள்ளன.

அந்த உறவுகள் 1982ம் ஆண்டு டைம் Malaysian French Bank வங்கியை வாங்கியதும் தொடங்கியதாகவும் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார். பின்னர் அந்த வங்கிக்கு Multi-Purpose Bank என மறு பெயரிடப்பட்டது.

பின்னர் Multi-Purpose, Langkah Bahagia-வுக்குச் சொந்தமான International Bank Malaysia Bhd வங்கி உட்பட ஆறு இதர நிதி அமைப்புக்களுடன் இணைக்கப்பட்டு Alliance Finance Group Bhd ஆனது.

“சனுசியின் அறிக்கைக்கு எந்த அடிப்படையும் இல்லை. அது வெறும் அவதூறு ஆகும். அன்வாரைத் தாக்குவதும் மகாதீரையும் டைம்-மையும் தற்காப்பதே அவரது நோக்கம். மலேசியர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பொருளாதார அத்துமீறலைக் காண்பதற்கு சனுசி தவறி விட்டார்,” என்றும் நிக் நஸ்மி சொன்னார்.

ஹொங் லியோங் குழுமம் மீது மௌனம்

ஆனால் சனுசி குறிப்பிட்ட ஹொங் லியோங் வங்கிக் குழுமம் மீது நிக் நஸ்மி மௌனம் அனுசரித்தார்.

ஹொங் லியோங், Alliance Finance Group Bhd ஆகியவற்றுக்கு அனுமதிகளைக் கொடுத்ததின் மூலம் வங்கித் தொழில் துறையில் மகாதீர் கொண்டிருந்த மலாய் திட்டத்தை அன்வார் முறியடித்து விட்டார் என முன்னாள் விவசாய அமைச்சருமான சனுசி சொன்னதாக நேற்று மலேசியா இன்சைடர் செய்தி இணையத் தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு யூதர்களுக்கு வங்கி அனுமதிகளை வழங்குவதில்லை என்ற ஜெர்மானியக் கொள்கையை பின்பற்ற மகாதீர் விரும்பியதாக மலாய் பொருளாதார பேரவையில் பேசிய சனுசி சொன்னார்.

என்றாலும் நாஸி ஜெர்மானியக் கொள்கைகளைத் தாம் பின்பற்ற விரும்பியதாக கூறப்படுவதை மகாதீர் நிராகரித்துள்ளார்.

“அது யூத எதிர்ப்புக் கொள்கையைப் போன்றது எனக் கருதப்படலாம். ஆனால் நோக்கம் மலேசியாவை மேம்படுத்துவதாகும். அது ‘மலாய் அல்லாதவர் எதிர்ப்பு’ அல்ல,” என மகாதீர் தமது பதிலில் தெரிவித்தார்.