‘தேர்தல் சீர்திருத்தம் மீதான பிஎஸ்சி-யை நிரந்தர அமைப்பாக மாற்றுங்கள்’

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை நிரந்தர அமைப்பாக மாற்றுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அரசு சாரா அமைப்பு ஒன்று கேட்டுக் கொண்டுள்ளது.

அந்தக் குழு தேர்தல் நடைமுறைகளில் காணப்படுகின்ற அக்கறைக்குரிய விஷயங்களை தொடர்ந்து ஆய்வு செய்வதுடன் தனது பரிந்துரைகள் அமலாக்கப்படுவதை அது கண்காணிக்கவும் வேண்டும் என NIEI எனப்படும் தேசிய தேர்தல் நேர்மைக் கழகத்தின் இடைக்காலத் தலைவர் கே ஷான் கூறினார்.

பெர்சே 2.0 பேரணியைத் தொடர்ந்து தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. தேர்தல் முறையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பரிந்துரை செய்வதற்கு அதற்கு ஆறு மாத அவகாசம் கொடுக்கப்பட்டது. அது தனது அறிக்கையை ஏப்ரல் 3ம் தேதி சமர்பித்தது.

என்றாலும் “சீர்திருத்தம் என்பது தொடர்ச்சியான நடைமுறையாகும். சிறந்த நடைமுறைகளை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட மற்ற அமைப்புக்களும் நாட வேண்டும். அவ்வப்போது நடைமுறைகளிலும் மற்ற முக்கியப் பகுதிகளிலும் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்,’ என ஷான் நேற்று விடுத்த அறிக்கை கேட்டுக் கொண்டது.

“குறிக்கோளுடன் கூடிய வெளிப்படையான போக்கின் அடிப்படையில் அமைந்த சிறந்த வேலை நடைமுறைகளை உருவாக்குவதற்கு அந்த நிலை மிகவும் அவசியமாகும்.”

மனித உரிமைகள் மீது நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்க அரசாங்கம் யோசித்து வருவதாக மக்களவையில் சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளது குறித்துக் கருத்துரைத்த ஷான், அந்த முடிவை வரவேற்றதுடன் அந்தக் குழுவின் பணிகள், நோக்கம் குறித்த விவாதங்களை பொது மக்களுடன் அவர் தொடங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் சீர்திருத்தம் தேவைப்படுகின்ற இதர துறைகளிலும் அது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.