பத்துமலை: நடராஜாவின் ‘நம்பிக்கை’ தோற்கடிக்கப்பட்டது

பத்துமலையில் 29 மாடி கொண்டோமினியம் கட்டுவதற்கு அனுமதியளித்த சிலாங்கூர் மாநில அரசாங்கம் அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய சமூகத்தின் நலனைப் பாதுகாக்க பத்துமலையில் கூட்டப்படும் மக்கள் அமைதிப் பேரணியில் “லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வழங்குவார்கள்” என்று பத்துமலை கோயில் நிருவாகக்குழுவின் தலைவர் ஆர். நடராஜா “நம்பிக்கை” தெரிவித்தார் என்று நேற்று தமிழ் நாளேடுகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இன்று பத்துமலை திருத்தலத்தில் இப்பேரணியில் கலந்துகொள்வதற்கு நடராஜாவுடன் முன்னாள் அமைச்சர் ச. சாமிவேலு, துணை அமைச்சர் எம். சரவணன், துணை அமைச்சர் கோகிலன் பிள்ளை, மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டி. மோகன் ஆகியோர் அங்கு கூடியிருந்தனர். மஇகா தலைவர் ஜி. பழினிவேலு அங்கு காணப்படவில்லை. அடுத்து தேவைப்பட்டது நடராஜாவின் “நம்பிக்கை”: இலட்சக்கணக்கான மக்கள் பேரணியில் கலந்து கொண்டு ஆதரவு வழங்குவது.

காலை மணி 11.00 அளவில் பேரணி தொடங்கியதும் “நம்பிக்கை” தலைவர் நடராஜா பேசினார். முன்னாள் அமைச்சர் ச.சாமிவேலு பேசினார். துணை அமைச்சர்கள் பேசினர். இன்னும் சிலர் பேசினர். ஆனால், அவர்களின் பேச்சைக் கேட்க நடராஜா வைத்திருந்த “நம்பிக்கை” அங்கு காணப்படவில்லை.

இலட்சக்கணக்கான மக்கள் பத்துமலையில் இந்திய சமூகத்தின் நலனைப் பாதுகாக்க திரள்வார்கள் என்ற நடராஜாவின் “நம்பிக்கை” தோல்வியில் முடிந்தது. “லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வழங்குவார்கள்” என்றால் பல இலட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என்று கொள்ளலாம். ஆனால், அங்கு திரண்டிருந்த மக்கள் ஓர் இலட்சம்கூட இல்லை. வெறும் 300 பேர் மட்டுமே அங்கு இருந்தனர்.

அந்த 300 பேரில் அனைவரும் மலேசியர்கள் அல்லர் என்றும்கூட கூறப்படுகிறது. சிலர் தமிழ் நாட்டிலிருந்து வந்துள்ள தொழிலாளர்கள் என்று அவர்களின் படங்களோடு அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெறும் 300 பேர் மட்டுமே அப்பேரணியில் திரண்டிருந்ததால், இலட்சக்கணக்கான மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என்ற நடராஜாவின் “நம்பிக்கை” தோற்கடிக்கப்பட்டு விட்டது. அவரது கோரிக்கைகளுக்கு ஆதரவு இல்லை என்பது தெளிவாகி விட்டது.

நடராஜாவின் தலைமைத்துவத்தில் திருப்தி அடைந்திருந்தால், அவரது கோரிக்கையில் மக்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தால், அவரது கோரிக்கை கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று மக்கள் உறுதியாக நம்பியிருந்தால், அவருக்கு இந்திய சமூகத்தின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்று திடீரென உதித்த ஞானத்தின் மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருந்திருந்தால், பத்துமலை திருத்தலம் குறித்த விவகாரம் என்பதற்காக மக்கள் நிச்சயம் பெருந்திரளாக கூடியிருப்பர்.

ஆக, மக்கள் நம்பிக்கை வைக்காததால் நடராஜாவின் “நம்பிக்கை” தோல்வியுற்றது.

நடராஜா தெரிவித்த “நம்பிக்கை” நம்பிக்கை வாக்கெடுப்பிற்குச் சமமாகும். அந்த வாக்கெடுப்பில் நடராஜா தோற்கடிக்கப்பட்டுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டவர் என்ன செய்ய வேண்டும்?

நடராஜாவின் “நம்பிக்கை” தோல்வியில் முடிந்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். பத்துமலை வளாகத்தில் காணப்படும் கட்டடங்களுக்கு தகுதிச் சான்றிதழ் (Certificate of Fitness) எதுவும் கிடையாது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். அக்குற்றச்சாட்டு இன்னும் மறுக்கப்படவில்லை.

பொது மக்கள் இலட்சக்கணக்கில் கூடும் பத்துமலை திருத்தலத்தில் காணப்படும் கட்டடங்களுக்கு சம்பந்தப்பட இலாகாவிடமிருந்து வழங்கப்பட்ட தகுதி சான்றிதழ்கள் இல்லை என்பது மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவலாகும். அதுவும் இன்னொரு “நம்பிக்கை” நட்சத்திரமான பிரதமர் நஜிப்பும் அவரது துணைவியாரும் அமர்ந்திருந்த கட்டடத்திற்கு தகுதிச் சான்றிதழ் கிடையாது என்று சேவியர் கூறியிருப்பது தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலான விவகாரமாகும். பிரதமருக்கு ஏதும் ஏற்பட்டு விட்டால், நாட்டின் கதி என்னவாகும்?

ஆக, “நம்பிக்கை” இழந்துவிட்ட பத்துமலை கோயில் தலைவர் ஆர். நடராஜா அடுத்து செய்ய வேண்டியதை முறைப்படி செய்வதற்கு முன்பு, பத்துமலை வளாகத்திலுள்ள கட்டடங்களுக்கு தகுதிச் சான்றிதழ்கள் இல்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்க வேண்டும்.

-ஜா. சுகித்தா, அக்டோபர் 26, 2012.