ஏன் நீதிபதிகளில் இந்தியர் எண்ணிக்கை அதிகம் இல்லை?

இந்திய மலேசிய வழக்குரைஞர்கள்  நீதித்துறையில் பணியாற்ற அவ்வளவாக ஆர்வம் கொள்வதில்லை. வழக்குரைஞர் தொழில் செய்து நிறைய பணம் சம்பாதிப்பது அவர்களுக்குப் பிடிக்கிறது, நீதிபதிகளின் ஒதுக்கமான வாழ்க்கை அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ்.

“வழக்குரைஞராக இருந்து நிறைய சம்பாதிக்க முடியும். நீதிபதிகள் வாழ்க்கைமுறையில் மற்றவர்களுடன் அதிகம் கலந்துறவாட முடியாது. எனவேதான், அவர்கள் நீதிபதிகள் ஆவதில் ஆர்வம் காட்டுவதில்லைபோல் தெரிகிறது”, என்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது நடப்பில் சட்ட அமைச்சருமான முகம்மட் நஸ்ரி கூறினார்.

பிரபலமான இந்திய மலேசிய வழக்குரைஞர்களை நீதிபதிகளாக பதவி ஏற்க அழைத்ததுண்டு என்று அமைச்சர் கூறினார். ஆனால், அவர்கள் வரவில்லை.

மலேசிய நீதிபதிகளில் இந்திய மலேசியர்கள் அதிகம் இல்லாதது ஏன் என்று ஜான் பெர்னாண்டஸ்(டிஏபி-சிரம்பான்) கேட்ட துணைக் கேள்விக்கு நஸ்ரி பதிலளித்தார்.

பெர்னாண்டஸ் தம் பிரதான கேள்வியில் கூட்டரசு நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அவர்களின் இன மற்றும்  ஆண் பெண் விகிதாசாரத்தையும் தெரிந்துகொள்ள விரும்பினார்.

கூட்டரசு நீதிபதிகளாக ஒன்பது பேர் நியமிக்கப்பட்டிருப்பதாக நஸ்ரி தெரிவித்தார். அவர்களில் இருவர் பெண்கள். அவர்களில் ஒருவர் மலாய்க்காரர்-அல்லாதவர்.

TAGS: