கெடா மாநிலச் செயலாளர் விலக வேண்டும் என ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

கெடா மாநிலச் செயலாளர் ராஸ்லி பாசிர் பதவி துறக்க வேண்டும் எனக் கோரி அலோர் ஸ்டாரில் மாநிலச் செயலகம் அமைந்துள்ள விஸ்மா டாருல் அமானுக்கு வெளியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்று திரண்டனர்.

கிராமத் தலைவர்களும் உள்ளிட்டிருந்த அந்த ஊராட்சிமன்ற உறுப்பினர் குழு ஏற்கனவே இது போன்று மூன்று முறை ஆட்சேபம் தெரிவித்துள்ளதாக அதன் பேச்சாளரும் குபாங் பாசு நகராட்சி மன்ற உறுப்பினருமான  முகமட் ஜமால் நாசிர் கூறினார்.

அந்தக் கட்டிடத்துக்கு முன்பு இருந்த மரங்களுக்கு அடியில் கூடிய 200க்கும் மேற்பட்டவர்கள் அமைதியாக பேரணியை நடத்தினார்கள்.

ராஸ்லி பதவி துறக்க வேண்டும் என்பதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தீவிரமாக இருப்பதாக முகமட் ஜமால் சொன்னார்.

குபாங் பாசு மாவட்ட மன்றத் தலைவர் அகமட் பிசோல் முகமட் நோர் உட்பட பல மாவட்ட மன்றத் தலைவர்களை இடம் மாற்றம் செய்ததின் மூலம் ராஸ்லி ஊராட்சி மன்ற உறுப்பினர்களுடைய எதிர்ப்பை உருவாக்கிக் கொண்டதாக கூறப்பட்டது.

ராஸ்லி இப்போது வெளிநாட்டில் அதாவது கெய்ரோவுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளார்.

“நாங்கள் விளையாடவில்லை. நாங்கள் இது குறித்து தீவிரமாக இருக்கிறோம். நாங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது இது நான்காவது முறையாகும். எங்கள் செய்தி ராஸ்லிக்கு உரைக்கும் வரையில் நாங்கள் போராட்டத்தைத் தொடருவோம்,” எனப் பேரணிக்கு முன்னதாக முகமட் ஜமால் நிருபர்களிடம் கூறினார்.

“ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மரியாதை கொடுக்காமல் அவர் நடந்து கொள்கிறார். குபாங் பாசு-வில் நிகழ்ந்தது பெரிய மலையின் முகடு தான்,” என அவர் மேலும் சொன்னார்.

இதனிடையே அந்த ஆர்ப்பாட்டங்கள் கெடா சுல்தானுக்கு எதிரான தேசத் துரோகம் என்றும் அரசர் அமைப்பு முறையை அவை அவமானத்துகின்றன என்றும் பிஎன் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிஎன்: அந்த எதிர்ப்புக்கு பாஸ் திட்டமிட்டது

இதனிடையே அந்த எதிர்ப்புக் கூட்டத்துக்கு பாஸ் திட்டமிட்டதாக கெடா எதிர்த்தரப்புத் தலைவர் மாட்ஸிர் காலித் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் கெடா சுல்தான் மாநிலச் செயலாளரை நியமனம் செய்திருப்பதால் அந்த ஆர்ப்பாட்டம் அரசர் குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

அந்தச் சர்ச்சை குறித்து கருத்துக்களைப் பெறுவதற்கு மந்திரி புசார் அஜிஸான் அபு பாக்கார்-உடன் தொடர்பு கொள்ளப்பட்டது. ஆனால் அவர் கருத்துக் கூற மறுத்து விட்டார்.

அஜிஸான் ஏற்கனவே பல முறை கருத்துக்களைத் தெரிவித்து விட்டதால் இந்த முறை கருத்துக் கூற வேண்டிய அவசியமில்லை என அவரது பத்திரிக்கைச் செயலாளர் ஹெல்மி காலித் கூறினார்.

ராஸ்லி இடமாற்றங்களுக்கு ஆணையிடுவதற்கு முன்பு மந்திரி புசாருடன் ஆலோசனை நடத்தவில்லை என்றும் அது மாநில அரசாங்கத்தை அவமதிப்பதாகும் என்றும் முகமட் ஜமால் சொன்னார்.

‘அவர் மாநில அரசாங்கத்தில் ஒரு பகுதியாகும். மாநில ஆட்சி மன்றத்தின் முடிவுகளுக்கு இணங்க செயல்பட வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.

 

TAGS: