லிபியாவில் எதிர்ப்பாளர்கள் தாக்குதல் தீவிரம்

லிபியாவில் கடாபி ஆதரவாளர்கள் வசம் உள்ள சிர்ட் நகரின் மீது, கடாபி எதிர்ப்பாளர்கள் நேற்று கடும் தாக்குதல் தொடுத்துள்ள நிலையில், தென் பகுதி நகரான சபாவில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று வெளியேற்றப்பட்டனர்.

லிபியாவில் கடாபி ஆதரவாளர்கள் வசம், பானி வாலித், சிர்ட், சபா மற்றும் ஜுப்ரா ஆகிய நகரங்கள் உள்ளன. இவற்றில் முதல் இரு நகரங்களின் மீது எதிர்ப்பாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், சிர்ட் நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முதல் சிர்ட் நகர் மீதான தாக்குதலை கடாபி எதிர்ப்பாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால், அங்கிருந்து வெளியேற இயலாமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.

லிபியாவின் தென்பகுதி நகரான சபாவில் இருந்து 1,200 ஆப்ரிக்கர்கள், அனைத்துலக புலம்பெயர்வோர் அமைப்பின் மூலம் சாட் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும், பிழைப்புக்காக சபா நகருக்கு வந்தவர்கள்.

இதற்கிடையில், நைஜரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் கடாபியின் மகன் அல் சாடி, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவர் லிபிய கால்பந்தாட்டக் குழுவின் தலைவராக இருந்த போது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்திப் பணம் பறித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இக்குற்றங்களின் அடிப்படையில், அவரை தேடப்படும் அரசியல்வாதிகள் பட்டியலில் சேர்க்கப் போவதாக, அனைத்துலக காவல்துறையான ‘இன்டர்போல்’ அறிவித்துள்ளது.