அம்பிகா: நாடாளுமன்றக் குழுவில் பொது அமைப்புகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்ற சிறப்புக்குழு ஒன்றை அமைக்கப்போவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்திருப்பது ஓர் “ஆக்கப்பூர்வமான நடவடிக்கை” என்று வருணித்துள்ள பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், அதில் பெர்சே 2.0-இன் எட்டுக் கோரிக்கைகளுக்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தேர்தல்கள் சுயேச்சையாகவும் நியாயமாகவும் நடத்தப்படும் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதி “வரவேற்கத்த” ஒரு முன்னேற்றம்தான், அதே வேளையில் நஜிப், பொது அமைப்புகளின் பேராளர்களையும் சேர்த்துக்கொள்ளும் வகையில் நாடாளுமன்றக் குழுவை விரிவுபடுத்த வேண்டும் என்று அம்பிகா கூறினார்.

“பெர்சேயின் எட்டுக் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று நம்புகிறேன். அதில் பொது அமைப்புகளின் பங்கேற்பையும் காண விரும்புகிறோம்.அந்த விசயத்தில் உதவவும் தயாராக உள்ளோம்.

“13வது பொதுத் தேர்தலுக்குமுன் செய்ய வேண்டியது நிறைய உள்ளது”, என்று பிரிட்டனில் விடுமுறையைக் கழித்துக்கொண்டிருக்கும் அம்பிகா ஒரு குறுஞ்செய்தியில் கூறியிருந்தார்.

நாடாளுமன்றக் குழுவில் பொது அமைப்புகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்று அம்பிகா கூறியிருப்பதை டிஏபி இளைஞர் தலைவர் அந்தோனி லோக்-கும் ஒப்புக்கொண்டார். அக்குழு அதன் பணியைப் பொறுப்புடன் செய்ய பொதுமக்கள் கருத்தும் அவசியமான ஒன்றுதான் என்பதை அவர் வலியுறுத்தினார்.

பெர்சே 2.0-இன் எட்டுக் கோரிகக்கைகளை அடிப்படையாக வைத்து அக்குழு அதன் பணிகளை மேற்கொள்ளலாம் என்று லோக் கூறினார்.

“சிறப்புக்குழுவை அமைக்க நஜிப் ஹரி ராயாவுக்கு முன்னர் நாடாளுமன்ற சிறப்புக்கூட்டமொன்றைக் கூட்ட வேண்டும். இல்லையேல் அக்டோபர் 3-வரை காத்திருக்க வேண்டியிருக்கும்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

“அக்குழு அதன் பணியைச் செய்துமுடிக்க மூன்று-மாத அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். அதன்பின் முழு அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும்.”

தூய்மையான, நியாயமான தேர்தல் நடைமுறைகளுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு செயலாக்கம் பெறும் வரை நாடாளுமன்றத்தைக் கலைக்கப்படாது என்று நஜிப் வாக்குக் கொடுக்க வேண்டும் என்றும் லோக் கூறினார்.

நாடாளுமன்றக் கூட்டத்தை நீட்டிக்க வேண்டும்

தேர்வுக் குழு அதன் பணிகளைச் செய்துமுடிக்கும்வரை இவ்வாண்டுக்கான நாடாளுமன்ற இறுதிக்கூட்டம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று மனித உரிமை ஊக்குவிப்புச் சங்கம் (ப்ரோஹாம்) கூறியது.

அடுத்த பொதுத்தேர்தலுக்குமுன் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றம் தீர்மானிக்க போதுமான அவகாசம் கொடுப்பது அவசியம் என்று ப்ரோஹாம் செயலாளர் மைக்கல் இயோ குறிப்பிட்டார்.

“நாடாளுமன்றத் தேர்வுக் குழுக்களின் மூலம் பொது விவாதங்களுக்கு இடமளிப்பது, மலேசியாவில் நாடாளுமன்ற செயல்முறையையும் மக்களாட்சியையும் மேலோங்கச் செய்யும் சிறந்த வழிமுறையாகும் என்று ப்ரோஹாம் உறுதியாக நம்புகிறது.

“அது, பொதுமக்களுக்கு அவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் பங்கேற்க முறையான வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுக்கிறது”, என்று இயோ கூறினார்.