எகிப்து வன்செயல்களில் 24 பேர் பலி

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஞாயிறன்று ஏற்பட்ட வன்முறை மிக்க கலவரங்களில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் இருப்பது தொடர்பில் அந்நாட்டின் அமைச்சரவை அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமைச்சர்கள், வன்முறை தொடர்பில் உண்மையைக் கண்டறிய விசாரணைகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக கட்டமைப்பிடம் ஆட்சியதிகாரம் கைமாற்றப்படும் நடவடிக்கைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எகிப்தில் அடுத்த சில மாதங்களில் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. கடும்போக்கு முஸ்லிம்கள் தம் மீது நடத்தும் வகுப்புவாதத் தாக்குதல்கள் அதிகரித்திருந்தும் தங்களைப் பாதுகாக்க பாதுகாப்பு அதிகாரிகள் போதிய அளவு முயல்வதில்லை என காப்டி கிறிஸ்தவ சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

ஊடுருவியவர்கள் என்று குறிப்பிட்டு ஞாயிறன்று வன்கலவரங்களைத் தூண்டியது இவர்கள்தான் என எகிப்தின் காப்டிக் திருச்சபை பழிசுமத்தியுள்ளது.