மலேசிய இந்தியர்கள் பிஎன் பக்கம் திசை மாறியுள்ளதாகக் கூறுவது உறுதி இல்லாதது -ஆர் கெங்காதரன்

பாரிசான் நேசனலுக்கு மலேசிய இந்தியர்களுடைய ஆதரவு குறிப்பிடத்தக்க அளவுக்கு கூடியிருப்பதாக மஇகா தலைவர் ஜி பழனிவேல் கூறிக் கொண்டுள்ளார்.  அது வலுவில்லாத அறிக்கை என்பது தெளிவாகும். மஇகா இழந்த இடங்களை மீண்டும் கைப்பற்ற முடியும் என நம்பிக்கை கொண்டிருந்தாலும் அடுத்த பொதுத் தேர்தலில் சிறந்த அடைவு நிலையைப் பெறும் ஆற்றலை அது பெற்றுள்ளதா என்னும் சந்தேகம் எனக்கு உள்ளது.

வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் மக்கள் எண்ணிக்கை இது வரை இல்லாத அளவுக்கு உயர்வாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். பிஎன் மாறி விட்டதா, வெளிப்படையான போக்கு, பொறுப்பு ஆகியவற்றுடன் புதிய பாணியிலான ஆளுமையை காட்டும் ஆற்றல் அதற்கு வந்து விட்டதா   என்பதே முக்கியமான கேள்வி ஆகும்.

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மலேசிய அரசியல் சூழ்நிலை நல்ல மாற்றம் கண்டுள்ளது. நமது உள்நாட்டு அரசியலிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக மக்கள் வெளிப்படையாகவும்  தெளிவாகவும் பேசத் தொடங்கியுள்ளனர்.

எதிர்காலத்தில் இந்த நாட்டுக்கு நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால் தேர்ச்சி பெற்ற மலேசிய இந்தியர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்குமா? மலேசிய இந்திய சமூகத்தின் வெற்றியை  விரைவுபடுத்துவதற்கு எத்தகைய நடைமுறைக்கு ஏற்ற நடவடிக்கைகள் இப்போது அமலாக்கப்படுகின்றன.?

அதே வேளையில் பிஎன் கட்சிகள், உட்பூசலையும் பிரிவு வாதங்களையும், கீழறுப்பு நடவடிக்கைகளையும் முற்றாக தவிர்க்க வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொல்கிறார்.

ஆனால் அத்தகைய பிரச்னைகளை தவிர்க்க முடியாது. ஏனெனில் நடப்பு பிஎன் தலைவர்கள் இடத்தைக் காலி செய்ய மறுக்கின்றனர். புதியவர்களுக்கு வழி விட மறுக்கின்றனர்.

அத்துடன் சில பிஎன் தலைவர்கள் மிகவும் மெத்தனமாக இருக்கின்றனர். அரசியலில் தேவையற்றவர்களாகி விட்டனர். ஆனால் அதிகாரத்தைத் தொடர்ந்து பிடித்துக் கொண்டிருக்கின்றனர். மாற்றங்களை ஏற்க மறுக்கின்றனர்.

உறுதியற்ற நடப்பு அரசியல் சூழ்நிலையில் மஇகா புத்தாக்கம் பெற்றால் தவிர தனது பணிகளை வழக்கம் போல் செய்து வர முடியாது என்பது வெள்ளிடை மலையாகும்.

மலேசிய இந்திய சமூகம் எதிர்நோக்கும் புத்தம் புதிய பிரச்னைகளுக்கு மஇகா தீர்வுகளைக் காண வேண்டும். அந்தப் பிரச்னைகளில் சில கடுமையானவை. நடப்புத் தலைவர்கள் அவற்றை கிடப்பில் போட்டுள்ளனர் அல்லது அதனை அலட்சியம் செய்கின்றனர்.

எல்லையில்லாத எதிர்காலத்துக்கு அவர்கள் மலேசிய இந்திய சமுதாயத்தை எப்படி தயார் செய்யப் போகின்றார்கள்?  போட்டி ஆற்றலைப் பெறவும் அதனை வைத்திருக்கவும் மலேசிய இந்தியர் சமூகத்தை அவர்கள் எப்படி தயார் செய்யப் போகின்றார்கள்?

கொள்கை அல்லது முடிவு எடுக்கப்படுவதில் மலேசிய இந்திய சமூகம் போதுமான செல்வாக்கைக் கொண்டுள்ளதா?

புதுமையான நடவடிக்கைகள் அவசியம்

அவர்கள் பழைய அணுகுமுறைகளை அல்லது வியூகங்களை இனிமேலும் பயன்படுத்த முடியாது. சமூகம் புதிய ஏற்றங்களை அடைவதற்கு உதவியாக புதிய வாய்ப்புக்களை உருவாக்க அவர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும். சமூகத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கு பொருத்தமாக இருக்கும் பொருட்டு சிறப்பாக தயாரிக்கப்பட்ட புதுமையான நடவடிக்கைகள் அவசியமாகும். மஇகா காரியங்களை வேறு வகையாகச் செய்வதற்கு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அபாயங்களை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

அண்மையக் காலமாக அரசாங்கம் சில சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அவை திடீர் கொள்கை முடிவுகள் என்பது திண்ணம். ஆனால் முக்கியமான கேள்வி இதுதான்: சமூகத்தை உருமாற்றம் செய்வதற்கு அவை போதுமானதா?

பல தசாப்தங்களாக ஒரங்கட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டு வந்ததால் உருமாற்றம் செய்வதற்கான அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் குறித்து பலர் எச்சரிக்கையாக இருப்பார்கள். அந்த உத்தேச உருமாற்ற நடவடிக்கைகள் உண்மையானவையா அல்லது வெறும் மாயாஜாலமா என்பதை கால ஒட்டத்தில்தான் அறிய முடியும்.

——————————————————————————–

ஆர் கெங்காதரன் முன்னாள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (இசா) கைதி ஆவார்