தேர்தல் ஆணையத்துக்குப் புதியவர்கள் தேவை: பக்காத்தான்

1ecமுதலில் தேர்தல் ஆணைய (இசி) உறுப்பினர்களை மாற்ற வேண்டும். அப்போதுதான் இசி-யை மேற்பார்வை செய்யும் நாடாளுமன்றக் குழுவுக்கு ஆதரவு அளிக்க முடியும் என்கிறது பக்காத்தான் ரக்யாட்.

“புதிய ஆணையம் அமைக்கப்படும்வரை இசி-மீது நம்பிக்கையை மேம்படுத்தும் முயற்சிகளிலும் தேர்தல் சட்டத்தைத் திருத்தும் பணிகளிலும் பக்காத்தான் ஒத்துழைக்காது”, என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

பக்காத்தான்  அக்குழுவுக்கு ஆதரவு அளிப்பது மே 5-இல் முடிவடைந்த 13-வது பொதுத் தேர்தலில் நடந்ததாகக்  கூறப்படும் தேர்தல் முறைகேடுகளுக்குத் தீர்வு காணப்படுவதைப் பொறுத்துள்ளது என்றாரவர்.

1 ec1“முறைகேடு நிகழ்ந்திருப்பதற்குத் தேவையான ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் மறு-தேர்தல் நடத்தப்பட வேண்டும்”, என்று சுவா குறிப்பிட்டார்.

சனிக்கிழமை, தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா, இசி-யை மேற்பார்வையிட இருகட்சி உறுப்பினர்களையும் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்திருப்பதாக தெரிவித்தது. அக்குழு பற்றி மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.

கறைபடிந்த பொதுத் தேர்தலுக்கான எதிர்ப்பை மக்கள், பேரணிகள் நடத்தி வெளிப்படுத்தி வந்துள்ள போதிலும்  இசி அதைக் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

இதுவே, “பிஎன் அதன் வெற்றியை நிலைநிறுத்துக்கொள்ள” இப்போதுள்ள இசி உதவியுள்ளது என்பதைத் “தெளிவாகக் காண்பிக்கிறது” என்று சுவா சுட்டிக்காட்டினார்.

இசி-இன் தில்லுமுள்ளுகளில் மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள்.

எனவே, “இசி மக்களின் கோரிக்கைக்கு இணங்கி உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லையேல் இறுதி அதிகாரம் யாருக்கு  என்பதை மக்கள் காண்பிப்பார்கள்”, என்று சுவா கூறினார்.

TAGS: