போலிசார் சீருடை அணியாது துப்பாக்கி ஏந்தக் கூடாது!

இலங்கையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் காவல்துறையினர் சீருடை அணியாது துப்பாக்கியேந்தக் கூடாது எனவும் குறிப்பாக அமைச்சரவை பாதுகாப்பு மற்றும் முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பு பிரிவினர் உட்பட அனைத்து காவல்துறை அதிகாரிகளும் கடமையில் ஈடுபடும்போது கட்டாயமாக சீருடை அணிய வேண்டும் என்று இலங்கை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

அண்மையில் மகிந்த ராஜபக்சேவின் கட்சியை சேர்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திர ஆகியோருக்கிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாராத லக்‌ஷ்மன் உட்பட நால்வர் கொல்லப்பட்டனர்.

மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெறும்போது காவல்துறையினர் உடன் இருந்ததாக விசாரனையின் போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காவல்துறை தலைமை அதிகாரி மெக்கி புரொக்டர் கூறுகையில்,

அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவு மற்றும் காவல்துறை நிலையங்களில் இருந்து துப்பாக்கியுடன் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு கடமைகளுக்காக செல்லும் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் கட்டாயமாக சீருடையணிய வேண்டும். இதற்கான அறிவித்தலை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் காவல்துறை தலைமையகம் வழங்கியுள்ளது என்றார்.

TAGS: