துணைப் பிரதமர்: சீர்திருத்தக் குழு அமைவது, நடப்பு தேர்தல் முறை மோசமானது எனப் பொருள்படாது

தேர்தல் சீர்திருத்தங்களை விவாதிக்க நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்படுவது, இது வரை பின்பற்றப்பட்ட தேர்தல் நடைமுறை மோசமானது எனப் பொருள்படாது. மாறாக அதனை மேலும் சீர்படுத்தும் நோக்கத்தை கொண்டதாகும். இவ்வாறு துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார்.

வெளிப்படையாக நடத்தப்பட்ட முன்னைய தேர்தல் முடிவுகளை சர்ச்சையாக்கக் கூடாது. தேர்தல் நடைமுறைகளை மேலும் சீர்படுத்த வேண்டும் என சில தரப்புக்கள் கோருகின்றன என்றும் அவர் சொன்னார்.

“தேர்தல் ஆணையமும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பது, தேர்தல்கள் நடத்தப்படும் முறையை வலுப்படுத்துவது, அஞ்சல் வாக்குகள் ஆகியவை அதில்  அடங்கும். அவற்றை மேம்படுத்தும் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.”

“அந்தக் குழு அமைக்கப்பட்ட பின்னர் அந்த விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படுவதுடன் புதிய பரிந்துரைகள் ஏதும் இருந்தால் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவை தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்படும்,” என்றும் முஹைடின் சொன்னார்.

அவர் இன்று புத்ராஜெயாவில் 2011ம் ஆண்டுக்கான தேசிய உருவாக்க அறிவியல், கணித போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

தேர்தல் சீர்திருத்தங்களை பரிசீலிப்பதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்படும் என்ற தகவலை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று அறிவித்தார்.

அந்தக் குழுவில் பிஎன் அரசாங்கம், எதிர்த்தரப்பு ஆகியவற்றின் பேராளர்கள் இடம் பெறுவர் என்றும் 13வது பொதுத் தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் சீர்திருத்தங்களை குழு விவாதிக்கும் என்றும் அவர் சொன்னார்.

தூய்மையான சுதந்திரமான தேர்தல்களை நடத்த பிஎன் அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் அந்தக் குழுவின் தோற்றம் பிரதிபலிப்பதாகவும் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.

“ஆகவே அவை எதிர்த்தரப்பின் கோரிக்கைகள் மட்டுமல்ல. நாங்களும்  தூய்மையான சுதந்திரமான முறையில் தேர்தல்கள் நடத்தப்படுவதைக் காண விரும்புகிறோம். சமமான கொள்கைகள் அடிப்படையில் அமைந்த அரசாங்கமாக நாங்கள் தேர்வு பெறுவதைக் காண விரும்புகிறோம்.”

பெர்னாமா