கிழக்கு மகாணத்தில் அரச படைகளுக்கு பலத்த எதிர்ப்பு!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ள மர்மமனிதர்களின் குற்றச் செயல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொள்ளை, பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளுதல், பொதுமக்களை மறைந்திருந்து தாக்குதல் போன்ற குற்றச் செயல் சம்பவங்கள் அண்மைக் காலமாக கிழக்கு மகாணம் உட்பட இலங்கையின் பல பகுதிகளில் அதிகரித்துள்ளது.

“மர்மமனிதன்”, “கிரிஸ் பூதங்கள்” என்ற போர்வையில் இந்த குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் பிண்ணனியில் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு இருப்பதாக செய்தியொன்று வெளியாகியுள்ளது.

இரவு நேரங்களில் பொதுமக்களை தாக்கிவிட்டு தப்பிச்செல்லும் மர்மமனிதர்களை மக்கள் துரத்திச் சென்றவுடன் அந்த மர்மமனிதர்கள் அருகில் அமைந்துள்ள காவல்நிலையங்களுக்குள் சென்று மறைந்துகொள்வதாகவும் அவர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில நேரங்களில் மக்களிடம் அகப்பட்டு நையபுடைக்கபடும் மர்மமனிதர்களை காக்க காவல்துறையினரும், இராணுவத்தினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகின்றனர். இதனால் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்படுவதுடன் கண்டன ஆர்பாட்டங்களும் நடைபெறுகிறது.

அண்மையில் மட்டக்களப்பு நகருக்கு அண்மையில் நிகழ்ந்த மர்மமனிதர்களின் அட்டகாசத்தையும் அவர்களுக்குத் துணையாக நின்ற இராணுவம் மற்றும் காவல்துறையினரின் செயல்பாட்டைக் கண்டித்தும் அப்பகுதி மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

போருக்கு பின்னர் சிங்கள இராணுவத்தை எதிர்த்து தமிழ் மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை துணிந்து நடத்துவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் பரவலாக நடைபெறும் இலங்கை அரச படைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின்போது இராணுவத்தினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டமை, கட்டடத்திற்குள் இராணுவ அதிகாரிகள் மக்களால் சிறைவைக்கப்பட்ட போன்ற சம்பங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான சம்பங்கள் தற்போதைய அரசாங்கம் மீது மக்கள் வெறுப்பாக இருக்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

சில சிங்கள பிரதேசங்கள் மற்றும் கிழக்கு மகாணத்தில் தொடரும் மர்மமனிதர்களின் குற்றச்செயல்களை தடுக்க அரச படைகளும் இலங்கை அரசாங்கமும் தவறுமேயானால் தமிழர் பிரதேசங்கள் உட்பட இலங்கையின் பல பகுதிகளில் மக்கள் புரட்சி வெடிக்கக்கூடும் என்று இலங்கை அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.