மலேசியா தேச நிந்தனைச் சட்டம் 1948 ஐ மீட்டுக்கொள்ள வேண்டும், ஐநா மனித உரிமை கழகம் வலியுறுத்தல்

 

UN human rights officeஐநா மனித உரிமை நிபுணர்கள் குழு மலேசியா அதன் தேச நிந்தனைச் சட்டம் 1948 ஐ மீண்டுக்கொள்ள வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது என்ற செய்தியை ஐநா மனித உரிமைகள் மன்ற ஆணையர் அலுவலகம் இன்று பின்னேரத்தில் ஜெனிவாவில் வெளியிட்டது.

அச்சட்டம் மாற்றுக் கருத்து கூறுதலை குற்றச் செயலாக்குவதன் மூலம் கருத்துரைக்கும் சுதந்திரத்திற்கு மருட்டலாக இருக்கிறது என்று அச்செய்தில் மேலும் கூறப்பட்டுள்ளது. அரசாங்கம் அல்லது அதன் அதிகாரிகள் மீது கூறப்படும் குறைகள் குற்றச் செயலாக்கப்படுவது அதிகரித்து வருவதாக தங்களுக்கு புகார்கள் கிடைத்துள்ளன என்று அந்த நிபுணர்கள் கூறினர்.

மலேசியர்கள் தங்களுடைய பல்வேறு வகையான அரசியல் கருத்துகளையும் ஆலோசனைகளையும் சுதந்திரமாகவும் பகிரங்கமாகவும் கூறுவதிலிருந்தும் விவாதிப்பதிலிருந்தும் தடுக்கும் வகையில் அச்சட்டம் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது என்று நிபுணர்களின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தேச நிந்தனைச் சட்டம் 1948 இன் கீழ் விதிக்கப்படும் தண்டனைகள் மற்றும் அச்சட்டத்தின் தன்மை ஆகியவற்றையும் நிபுணர்கள் விடுத்துள்ள செய்தி அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், மனித உரிமை ஆதரவாளர்கள், அறிவுக்கழகத்தினர், வழக்குரைஞர்கள், மாணவர்கள் மற்றும் செய்தியாளர்கள் உட்பட 23 பேர்  இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தங்களுக்கு புகார்கள் கிடைத்துள்ளன என்று அந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் (அஸ்மி ஷரோம்) தேச நிந்தனைச் சட்டம் 1948 இன் சட்டப்பூர்வ தன்மை குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்று செய்திருந்த மனுவை செசன்ஸ் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதையும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு மார்ச்சில் …

அனைத்துலக மனித உரிமைகள் தரத்திற்கு ஏற்ப மலேசியா அதன் சட்டங்களை, தேச நிந்தனைச் சட்டம் 1948 உட்பட, ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதோடு பேச்சு சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பதற்கான உறுதியான வழிமுறைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐநா நிபுணர்கள் கூறுகின்றனர்.

மலேசியாவின் தேச நிந்தனைச் சட்டம் குறித்து ஐநா மனித உரிமை நிபுணர்கள் பல தடவைகளில் தங்களுடைய கருத்துகளைத் UN human rights office1தெரிவித்துள்ளனர். 16 வருடங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு வருகையளித்திருந்த பேச்சு சுதந்திரம் மீதான ஐநாவின் முதல் சிறப்பு அதிகாரி அபிட் ஹுசெய்ன் இந்த தேச நிந்தனைச் சட்டம் குறித்து அவரது கவலையைத் தெரிவித்தார். இச்சட்டம் பேச்சு சுதந்திரத்தை நசுக்குவதற்கும், அமைதியாகக் கூடுதலை தடுப்பதற்கும் பயன்படுத்தக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

மிக அண்மையில், கடந்த மார்ச் மாதத்தில், தேச நிந்தனைச் சட்டம் பற்றி தெரிவிக்கப்பட்டிருந்த அனைத்துலகக் குறைகள் கவனத்தில் கொள்ளப்படும் என்று மனித உரிமைகள் மன்றத்திடம் மலேசியா வாக்குக் கொடுத்துள்ளது என்று தெரிவித்த அந்த நிபுணர்கள், இந்த வாக்குறுதியைத் தொடர்ந்து முன்னேற்றம் காண மலேசிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் செய்து பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை ஆகியவற்றை குற்றச்செயலாக்கி தண்டனை வழங்குவதை ஒரு முடிவிற்கு கொண்டுவருவதற்கான ஒரு முற்போக்கு வழியைக் காண அதிகாரிகளுக்கு தங்களுடைய ஆதரவை வழங்கியுள்ளனர் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.