நாளேடு:மதமாற்ற இயக்கம் வெளிப்படையாகவே நடக்கிறது

முஸ்லிம்களை மதமாற்றும் நடவடிக்கை சட்டப்படி குற்றமாகும். ஆனால் அந்த “மதமாற்றும் இயக்கம்” வெளிப்படையாகவே நடக்கிறது என்று கூறுகிறது மலாய்மொழி நாளேடான சினார் ஹரியான்.

“முன்பெல்லாம் மோட்டார் சைக்கிள்களிலும் கார் கண்ணாடித் துடைப்பான்களிலும் அஞ்சல் பெட்டிகளிலும் துண்டறிக்கைகளை விட்டுச் செல்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது துணிச்சலுடன் அதைச் செய்கிறார்கள்”, என்று சினார் கூறியுள்ளது.

வெளியில் தெரியாமல் நடக்கும் இந்த மதமாற்ற நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் ஏழைகளுக்கு உதவியளிப்பதாகக் கூறும் தரப்பினர் உதவியளிப்பதில் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

முஸ்லிமாக மாறிய ஒருவரையும் அறிமுகப்படுத்திய அது, அவர் கிறிஸ்துவ பாதிரியாக பயிற்சிபெற்று வந்த காலத்தில் 200 முஸ்லிம்களை மதம் மாற்ற உதவியதாகக் கூறினார் என்றும் குறிப்பிட்டது.

முகம்மட் பார்ஹான் அப்துல்லா அல்-ஹபிஸ்-முன்பு யோகான்ஸ்- சாபா கோட்டா பெலுட்டில் ஒரு தேவாலயத் தலைவரின் புதல்வர்.1990-இல், கிறிஸ்துவத்தைவிட்டு விலகி இஸ்லாத்துக்கு மாறுமுன்னர் அவர் பாதிரியார் ஆவதற்குப் பயிற்சி பெற்று வந்தார். 

வாழ்க்கையில் திருப்தி இல்லை என்பதால் இஸ்லாத்துக்கு மாறியதாக அவர் சொன்னார்.

“எனக்கிருந்த சந்தேகம், அமைதியின்மை எல்லாம் (மதம் மாறிய பின்னர்) மறைந்து போனது. இஸ்லாத்தில் நிம்மதி காண்கிறேன். முன்பு இப்படி இருந்தது இல்லை”, என்றவர் அந்நாளேட்டிடம் தெரிவித்தார்.

இஸ்லாத்துக்கு மாறி வந்த 20 ஆண்டுகளில் தாம் கொடுத்த ஊக்கத்தில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்துவர்கள் இஸ்லாத்தைத் தழுவியிருப்பதாகவும் முகம்மட் பார்ஹான் கூறினார்.

முஸ்லிம்களை மதமாற்றும் நடவடிக்கைகளைத் தாம் கண்காணித்து வந்திருப்பதாகவும், மதமாற்றத்தில் ஈடுபடுவோர் அரசமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் சமய உரிமையைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றாரவர்.

மதமாற்ற இயக்கத்தைத் தடுக்கும் முயற்சிகளும் பலனின்றி போய்விட்டன. அரசாங்கம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்கிறது. பிடித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 35,000 மலாய்மொழி பைபிள்கள் பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் தொடர்பிலான இன்னொரு நிலவரத்தில் உத்துசான் மலேசியா, ஜாலான் கிளாங் லாமாவில் இயங்கி வந்த டியூசன் மையம் ஒன்றை மூடுமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டிருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறது.

கடந்த வாரம் அந்நாளேடு, அங்கு இலவசமாக வழங்கப்படும் டியூசன் வகுப்புகளின்வழி முஸ்லிம் மாணவர்களிடம் கிறிஸ்துவ போதனைகள் பரப்பப்படுவதாகக் கூறி அதனை விசாரிக்க வேண்டுமென அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டிருந்தது.

இப்போது அந்த மாணவர்களுக்கு சிபூத்தே அம்னோ இளைஞர் பிரிவு டியூசன் வழங்க ஏற்பாடு செய்து வருகிறது. மாணவர்களுக்கு உதவப் பொருத்தமானவர்களை அடையாளம் கண்டுவருவதாக அதன் தலைவர் முகம்மட் ரஸ்லான் ரபி கூறினார்.