கொரோனா கிருமி பாதிப்பில் முதல் மலேசியர்

சிலாங்கூரைச் சேர்ந்த 41 வயதான மலேசியர் ஒருவர் கொரோனா கிருமியால் (2019-nCoV) பாதிக்கப்பட்டுள்ளார்.

இதை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் அறிவித்தார்.

இந்த நபர் ஜனவரி 16 முதல் 23 வரை வணிக பயணத்திற்காக சிங்கப்பூரிலிருந்ததாக தெரிகிறது. சிங்கப்பூரில் இருந்தபோது, சீனாவைச் சேர்ந்தவர்கள் உட்பட “சர்வதேச பிரதிநிதிகள்” கலந்து கொண்ட கூட்டங்களில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

ஆறு நாட்களுக்குப் பிறகு ஜனவரி 29 ஆம் தேதி, சிலாங்கூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ நிலையத்திலிருந்து காய்ச்சல் மற்றும் இருமலுக்கு மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார். பிப்ரவரி 2 ஆம் தேதி, அவர் சுங்கை புலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டார். நேற்று (பிப்ரவரி 3) அவருக்கு கிருமி பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அந்த நபர் தற்போது சீரான நிலையில் உள்ளதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுல்கிப்ளி கூறினார். மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளிலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

தற்கிடையில், சுல்கிப்ளி இரண்டாவது புதிய பாதிப்பையும் அறிவித்தார். சீனாவின் வுஹான் நகரைச் சேர்ந்த 63 வயது நபர், ஜனவரி 18 அன்று KLIA-க்கு வந்தட்டைந்தார்.

ஐந்து நாட்களுக்குப் பிறகு ஜனவரி 23 ஆம் தேதி அந்த நபர் காய்ச்சலை அனுபவிக்கத் தொடங்கி கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

பிப்ரவரி 2 ஆம் தேதி வரை, அந்த நபருக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டு, கோலாலம்பூர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சீரான நிலையில் இருப்பதாக அமைச்சர் கூறினார்.

இது மலேசியாவில் பாதிப்பின் மொத்த எண்ணிக்கையை 10 ஆக்கியுள்ளது. அதில், ஒன்பது சீனா நாட்டினர்; ஒரு மலேசியர்.