‘கொரோனா வைரஸால் மலேசியா பள்ளிகளை மூட தயாராக வேண்டும்’

‘கொரோனா வைரஸால் மலேசியா பள்ளிகளை மூட தயாராக வேண்டும்’

கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸால் உண்டாகும் கிருமித் தொற்று மேலும் தீவிரமடையும் பட்சத்தில், பள்ளிகளை மூடுவது, ஒரே இடத்தில் திரளான மக்கள் கூடுவதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள மலேசிய அரசு தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கிருமித் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்கு பசிஃபிக் பிராந்தியம் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இருப்பதாக அந்தப் பிராந்தியத்துக்கான உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டகேஷி கசாய் தெரிவித்துள்ளார்.

எனவே மலேசியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு தீவிரமடையும் பட்சத்தில், அதை எதிர்கொள்ள இப்போதே தயாராக வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.

“சீனாவுக்கு வெளியே பலருக்கு கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கும் சீனாவுக்கும் எத்தகையதொரு தொடர்பும் இல்லை. எனவே அண்மையில் கிடைத்த தகவல்களை வைத்து பார்க்கும்போது கிருமித் தொற்றுப் பரவல் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.”

“அத்தகையதொரு நிலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள தயாராக வேண்டும். அதற்கு இப்போதே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிக நேரம் தேவைப்படும். அப்போதுதான் அந்நடவடிக்கைகளின் தாக்கம் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடையும்.”

“பள்ளிகளை மூடுவது, பெரிய அளவிலான ஒன்றுகூடல் நிகழ்வுகளை ஒத்தி வைப்பது ஆகிய நடவடிக்கைகள் மூலம் கோவிட்-19 கிருமித் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியும்,” என்று மருத்துவர் டகேஷி கசாய் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஏன் கவலைப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இது ஒரு புது நோய். இது குறித்து நமக்கு அதிகம் தெரியாது. எனவே எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதுதான் சிறந்த வழி. கைகளைத் தொடர்ந்து கழுவுவது, தனி நபர் சுகாதாரத்தை முறையாகப் பேணுவது, அதிகம் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்பது ஆகியவை கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உதவும்.”

“சீனாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு விழுக்காட்டினர் மரணமடைந்துள்ளனர். ஹூபே மாகாணத்துக்கு வெளியே இறந்தவர்களின் எண்ணிக்கை 0.4 விழுக்காடாக உள்ளது.”

“எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலானது, நிலைமை மோசமடைந்துவிட்டது என்பதைக் குறிக்கவில்லை. இதனால் மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்று பரவலாக இருக்கும் என்று அர்த்தமல்ல,” என்றும் டகேஷி காசாய் தெரிவித்துள்ளார்.

சீன அதிபருடன் ஆலோசனை நடத்திய மகாதீர்

இதற்கிடையே, கோவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, சீனா அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதுவிடம் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீன அதிபரும் மகாதீரும் நேற்று தொலைபேசி வழியாக உரையாடினர்.

இரு தலைவர்களும் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் பேசியதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இரு தலைவர்களும் கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா கிருமித் தொற்று பாதிப்பை சீனாவால் கட்டுப்படுத்த முடியும் என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைத் தக்க வைத்துக் கொள்வதுடன், நடப்பாண்டுக்கான இலக்குகளை அடைய முடியும் என்றும் மலேசியப் பிரதமரிடம் சீன அதிபர் தெரிவித்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சின் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

ஷி ஜின்பிங்: ‘மலேசியாவின் நட்புணர்வை வெளிப்படுத்தும் அழைப்பு’

கொரோனா கிருமிக்கு எதிராக சீன குடிமக்கள் போராடி வரும் இந்த இக்கட்டான நேரத்தில், மலேசியப் பிரதமர் தன்னை அழைத்துப் பேசி இருப்பது, சீனாவுக்கான மலேசியாவின் ஆதரவையும், நட்புணர்வையும் வெளிப்படுத்துகிறது என சீன அதிபர் தெரிவித்துள்ளார்.
மலேசியா உள்ளிட்ட சீனாவின் அண்டை மற்றும் நட்பு நாடுகள் சீனாவுக்கு உதவும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சீன அதிபர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கிருமி பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதுடன், கிருமித் தொற்றில் இருந்து குணமடைந்து வருவோரின் அதிகரித்து வருவதாகவும் அவர் மலேசியப் பிரதமர் மகாதீரிடம் கூறினார்.

மலேசியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

இதற்கிடையே, மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 19ஆக நீடிக்கிறது. இவர்களில் ஆறு பேர் மலேசிய குடிமக்கள். 13 பேர் சீன குடிமக்கள் ஆவர்.

இந்நிலையில் சீன குடிமக்கள் நான்கு பேர் கொரோனா கிருமித் தொற்றில் இருந்து குணமடைந்து இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil