நடமாட்டக் கட்டுப்பாடு அமல்படுத்தியதில் இருந்து 28 பேர் கைது

கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த செயல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை அமல்படுத்தியதிலிருந்து இருபத்தெட்டு நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

மலேசியர்கள் நடமாட்டக் கட்டுப்பாடை பின்பற்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லாவிட்டால் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

நடமாட்டக் கட்டுப்பாடை அமல்படுத்துவதில் காவல்துறைக்கு உதவுவதற்காக ஞாயிற்றுக்கிழமை முதல், மலேசிய ஆயுதப்படைகள் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்கள் தங்களின் கடமையைச் செய்வதைத் தடுப்பவர்களையும் நடமாட்டக் கட்டுப்பாடு காலத்தில் காவல்துறையினர் வழங்கிய உத்தரவுகளுக்கும் அறிவுரைகளுக்கும் கீழ்ப்படிய மறுப்பவர்கள் மீதும் அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்மாயில் சப்ரி பொதுமக்களுக்கு நினைவுபடுத்தினார்.

“695 காவல்துறை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 46 வழக்குகள் விசாரணையில் உள்ளன. 46 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளன. 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.”

“சட்டத்தை எதிர்க்க வேண்டாம் என்று நான் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறேன். அரசாங்கம் இப்போது தனிநபர் மற்றும் குடும்ப பாதுகாப்பைப் பாதுகாத்து கொண்டிருக்கிறது” என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.