பினாங்கு எல்ஆர்டிக்கு நிதியளிப்பதற்கான உத்தரவாதத்தைப் புத்ராஜெயா திரும்பப் பெறுகிறது

இரயில் போக்குவரத்து (எல்ஆர்டி) திட்டத்திற்காக, பினாங்கு மாநில அரசாங்கம் விண்ணப்பித்த RM2.04 பில்லியன் கடனுக்குத் தேசிய முன்னணி (பிஎன்) அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளது.

தி எட்ஜ் மார்க்கெட்ஸ்’ அறிக்கையின்படி, RM9.5 பில்லியன் திட்டத்தின் பகுதி கடனுக்கான அரசாங்க உத்தரவாதத்தை வழங்க வேண்டாம் என்று புத்ராஜெயா முடிவு செய்துள்ளது.

இந்த முடிவு நாட்டிற்கான அரசாங்கத்தின் திருத்தப்பட்ட வருவாய் மற்றும் வருமான திட்டங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளது என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் கூறியதாக, அது மேற்கோளிட்டுள்ளது.

“அரசாங்க உத்தரவாதத்துடன் கூடிய எந்தவொருப் புதிய கடனும் முடிந்தவரை ஆராயப்பட வேண்டும், ஏனெனில் இது அரசாங்கத்தின் தொடர்ச்சியான பொறுப்பை அதிகரிக்கும். அரசாங்கத்தின் தொடர்ச்சியான பொறுப்பில் சரிபார்க்கப்படாத அதிகரிப்பு, நிதி அபாயங்களை அதிகரிக்கும் மற்றும் சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் மலேசியாவின் கடன் மதிப்பீட்டை பாதிக்கும்.

“எனவே, கடனுக்கான முன்னுரிமை மற்றும் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு ஏற்ப, திட்டங்களை மறுசீரமைப்பதன் மூலம், அரசாங்க உத்தரவாதங்களை மட்டுப்படுத்துவது விவேகமானது,” என்று அவர் கூறினார்.

இத்திட்டம், எம்ஆர்டி லைன் 1 மற்றும் 2, எல்ஆர்டி 3, சரவாக் பான் போர்னியோ நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை இரயில் இணைப்பு (ஈசிஆர்எல்) போன்ற அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பிற பட்ஜெட் திட்டங்களுக்கும் அதிகமாக உள்ளது என்று ஜஃப்ருல் கூறினார்.

செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, புத்ராஜெயா ஒப்புக்கொண்டுள்ள அரசாங்க உத்தரவாதங்களின் மொத்த மதிப்பு RM289.8 பில்லியன் என்று அவர் கூறினார்.

இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 20.1 விழுக்காடாகும்.

புத்ராஜெயாவின் உத்தரவாதம் இல்லாமல், மாநில அரசால் போதுமான நிதியைத் திரட்ட முடியாது என்று பினாங்கு முதல்வர் சோவ் கூறினார்.