‘இரண்டாம் தர குடிமக்கள் இல்லை’ – பௌத்த குழு கெடா எம்.பி.க்கு கண்டனம்

மாநிலத்தில் தைப்பூச நிகழ்வு விடுமுறையை இரத்து செய்ய, கெடா மாநில அரசு எடுத்த முடிவு பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது.

சமீபத்தில், மலேசியப் பௌத்த இளைஞர் சங்கம் மந்திரி பெசார் சனுசியின் முடிவு மிகவும் பொருத்தமற்றது என்று விவரித்தது.

மதம் மற்றும் இனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு குடிமகனுக்கும் நியாயமான முறையில் நடந்துகொள்வதற்காக, இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அதன் பொதுச்செயலாளர் ஹோய் ஜுங் வாய் மாநில அரசுக்கு அழைப்பு விடுத்தார்.

“அரசியல்வாதிகள் நிகழ்வு விடுப்பை ஓர் அரசியல் கருவியாகப் பயன்படுத்தக்கூடாது, சில மதக் குழுக்களுக்கு, நிகழ்வு விடுப்பின் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் உணராமல், தன்னிச்சையான முடிவுகளை எடுக்கக்கூடாது.

“நம் நாட்டில் இரண்டாம் தர குடிமக்களாக யாரும் இல்லை. எனவே, மத கொண்டாட்டங்களுக்கான தற்போதைய நிகழ்வு விடுமுறைகளைப் ‘பரிசாகவோ அல்லது தாராளமாகவோ’ கருதக்கூடாது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மத விழாக்களுக்கும் அரசாங்கம் மரியாதை செலுத்த வேண்டும், நியாயமாக இருக்க வேண்டும் என்று ஹோய் கூறினார்.

“தவிர, இது மலேசியர்களிடையே புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் அதிகரிக்கும்.

“எங்களுக்கு நம்பகமான, அனைத்து மக்களின் தேவைகளையும் கவனித்துக்கொள்ளக் கூடிய ஓர் அரசாங்கம் தேவை. கெடா மாநில அரசு இந்த விஷயத்தைப் புத்திசாலித்தனமாகக் கையாள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.