முனைமுகப் பணியாளர்கள் விடுப்பெடுக்க முடியாது, ஆனால் துணையமைச்சர் முடியும் – புவாட்

இந்த நேரத்தில், வெளிநாட்டில் இருக்கும் கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் எட்மண்ட் சந்தாரா குமார், கோவிட் -19 தொற்றை நிர்வகிக்கும் தேசிய முன்னணி முனைமுகப் பணியாளர்களின் அர்ப்பணிப்பைத் தனக்கு நினைவூட்டுவதாக புவாட் சர்காஷி கூறினார்.

அந்த அம்னோ உச்சமன்ற உறுப்பினர், தொற்றுநோயுடன் இன்னமும் போராடி வரும் முன்னணி ஊழியர்கள் மிகுந்த அனுதாபத்திற்கு உரியவர்கள் என உணர்வதாகவும், சந்தாரா குமார் போன்று அவர்களால் விடுமுறை நாட்களை அனுபவிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த ஊழியர்கள் விடுமுறைக்குச் செல்லக்கூடிய மிக நீண்ட நாள், இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே என்றும், அதுவும் அவர்கள் பணிபுரியும் மாவட்டத்திற்கு வெளியே இருக்கும் குழந்தைகள் மற்றும் மனைவிகளைப் பார்க்க மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் கூறினார்.

வெளிநாட்டில் இருக்கும் குடும்பத்தினருடன் நேரம் கழிக்க, 55 நாள் நீண்ட விடுப்பு விண்ணப்பத்தை எவ்வாறு அங்கீகரிக்க முடியும் என்று மக்கள் விசித்திரமாக உணர்ந்ததாகவும், இது மிகவும் அசாதாரணமானதாகக் கருதப்படுவதாகவும் அவர் கூறினார்.

“ஒரு பொறுப்பான தந்தையாக இருக்க விரும்பிய காரணத்திற்காக, சந்தாரா நியூசிலாந்து செல்ல விடுப்பு மற்றும் எல்லை தாண்டும் ஒப்புதலுக்கு விண்ணப்பித்ததாகச் சொன்னார்.

“தங்கள் குடும்பங்களைச் சந்திக்க, ஒரு மாவட்டத்தையோ அல்லது மாநிலத்தையோக் கடக்க தடை விதிக்கப்பட்ட சாதாரண மக்களைப் பொறுப்பற்ற பெற்றோர்களாகக் கருத முடியுமா?

“அவர்கள் நாட்டின் எல்லையைக் கடக்கக் கேட்கவில்லை,” என்று அவர் இன்று காலை சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சரவாக் ரிப்போர்ட் செய்தியைத் தொடர்ந்து, சந்தாரா நாட்டில் இருக்கிறார, இல்லையா என்பது குறித்து பத்து எம்.பி. பி பிரபாகரன் வெளியிட்ட அறிக்கை பலரின் கவனத்தை ஈர்த்தது.

அதனைத் தொடர்ந்து, சந்தாரா நேற்று தன்னிலை விளக்கமளித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மக்கள் பிரதிநிதியான ஒருவர், முடிந்தவரை அடிக்கடி பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதியில் இருக்க வேண்டும், குறிப்பாக நாடு இப்போது ஒரு தொற்றுநோய் மற்றும் வெள்ள நிலையை எதிர்கொண்டிருக்கும் போது; தற்போது சிகாமாட்டும் இந்த பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது என்றார் புவாட்.