அறிக்கை : பிஎன் கூட்டம் இரத்து செய்யப்பட்டது, ஆனால் விளக்கம் இல்லை

தேசிய முன்னணி (பி.என்.) கூட்டணியின் உச்சமன்றக் கூட்டம் விளக்கம் இல்லாமல் இரத்து செய்யப்பட்டதாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

இன்று இரவு நடைபெறவிருந்த அக்கூட்டம் இரத்து செய்யப்பட்டதாக, பி.என். தகவல் தொடர்பு பிரிவில் இருந்து, புலனச் செய்தி மூலம் அறிவிக்கப்பட்டதாக ஆஸ்ட்ரோ அவானி தெரிவித்துள்ளது.

இருப்பினும், இரத்து செய்யப்பட்டதற்கான எந்த விளக்கமும் காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்று அது கூறியது.

முன்னதாக தொடர்பு கொண்டபோது, ​​சபா பெர்சத்து ரக்யாச் கட்சியின் (பிபிஆர்எஸ்) துணைத் தலைவர் ஆர்தர் ஜோசப் குருப், கூட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக இன்னும் காத்திருப்பதாக மலேசியாகினியிடம் கூறினார்.

இதற்கிடையில், ம.இ.கா. தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரனையும் அச்சந்திப்பு குறித்து மலேசியாகினி கேட்டது.

“எனக்குத் தெரியவில்லை, எனக்கு உடல்நிலை சரியில்லை.

“நான் முதலில் அவர்களுடன் பேசுகிறேன்,” என்று மசீச கலந்துகொள்ளவுள்ளது போலும் என்று சுட்டிக்காட்டியபோது அவர் பதிலளித்தார்.

“மசீச-உடன் நான் முதலில் பேசுகிறேன், ஏனென்றால் சில திருத்தங்கள் (நிகழ்ச்சி நிரலில்) உள்ளன. நான் முதலில் தலைவருடன் (பி.என்.) பேச விரும்புகிறேன்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

கூட்டத்தில் கலந்துகொள்வோம் என்று, மலேசியாகினியிடம் ஆரம்பத்தில் கூறிய ஒரு மசீச வட்டாரம் பின்னர் விளக்கமின்றி தனது கூற்றை மாற்றியது.

இதற்கிடையில், நேற்றிரவு ஆஸ்ட்ரோ அவானி ஒரு தனி அறிக்கையில், பெயரிடப்படாத பிஎன் உறுப்புக் கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவரை மேற்கோள்காட்டி, கூட்டத்தில் சில உறுப்புக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதால் கூட்டம் இரத்து செய்யப்படலாம் என்று கூறியிருந்தது.

“பி.என். கூட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.