RM1.69 பில்லியன் வரி : எல்.எச்.டி.என். திவால் அறிவிப்பை இரத்து செய்ய நஜிப் தவறிவிட்டார்

தனக்கு எதிரான அரசாங்கத்தின் RM1.69 பில்லியன் வரி உரிமைகோரல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பைத் தடுத்து நிறுத்த நஜிப் ரசாக் தவறிவிட்டார்.

எனவே, உள்நாட்டு வருவாய் வாரியம் (எல்.எச்.டி.என்.), முன்னாள் பிரதமருக்கு எதிரான திவால் அறிவிப்பைத் தொடரலாம்.

இந்த முடிவைக், கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஹ்மத் பாச்சே மின்னஞ்சல் மூலம் நஜிப் மற்றும் எல்.எச்.டி.என்.-ஐப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் குழுவுக்கு அனுப்பியது.

எல்.எச்.டி.என். வழங்கிய பிப்ரவரி 4-ம் தேதியிட்ட அந்த நோட்டீஸ், தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது, நீதிமன்ற நடவடிக்கைகளைத் துஷ்பிரயோகம் செய்வதோடு, அடக்குமுறை அடிப்படையிலான என்று கூறி முன்னாள் பிரதமர் அந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார்.

இந்த அறிவிப்பு, தனது அரசியல் வாழ்க்கையை அழிக்கும் நோக்கில் ஓர் அரசியல் சதி தந்திரம் என்றும் அவர் கூறினார்.

அரசாங்கம், எல்.எச்.டி.என். மூலம், கோலாலம்பூர் உள்ள உயர் நீதிமன்றத்தில், கடனாளி என்று நஜிப் மீது திவால் நோட்டீசைத் தாக்கல் செய்தது.

அந்த அறிவிப்பின் அடிப்படையில், 2020 ஜூலை 22 (உயர்நீதிமன்ற தீர்ப்பின் தேதி) முதல் பிப்ரவரி 4, 2021 வரையில், மொத்த நிலுவைத் தொகையில் ஆண்டுக்கு ஐந்து விழுக்காடு வட்டி விகிதத்துடன், நஜிப் RM1.69 பில்லியனைச் செலுத்த வேண்டும், இது RM45.9 மில்லியன் மற்றும் RM15,000 செலவுகள் உட்பட, பிப்ரவரி 4, 2021 நிலவரப்படி, இந்தத் தொகை RM1,738,804,204.16 ஆனது.

கடந்த ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி, எல்.எச்.டி.என்.யின் விண்ணப்பம் அவருக்கு எதிராக நேரடித் தீர்ப்பை வழங்க அனுமதித்த பின்னர், 2011 முதல் 2017 வரையிலான காலப்பகுதியில் எல்.எச்.டி.என்.யின் கூடுதல் வரி நிலுவைத் தொகையை RM1.69 பில்லியனாகச் செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விசாரணையில் சாட்சிகளின் வாக்குமூலங்களைக் கேட்காமல், நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட வழக்கை வாதத்தின் மூலம் தீர்மானிக்கும் போது அது நேரடி தீர்ப்பு ஆகும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நஜிப் மேல்முறையீடு செய்தார், இது ஜூன் 16-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

வருமான வரிச் சட்டம் 1967 (ஐ.தி.ஏ) பிரிவு 103 (2)-இன் படி, மதிப்பீட்டைச் செலுத்த உத்தரவிடப்பட்ட ஒருவர் மேல்முறையீடு தாக்கல் செய்தாலும் கூட எல்.எச்.டி.என்.க்குப் பணம் செலுத்த வேண்டும்.