கு லி பத்திரிகையாளர் சந்திப்பை இரத்து செய்ததில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன? – காடிர் ஜாசின்

கருத்துரை | இன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்த அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு ரஸாலீ ஹம்ஸா அதனை இரத்து செய்ய வேண்டியிருந்தது.

“தவிர்க்க முடியாத சில விஷயங்கள்” காரணமாக இரத்து செய்யப்படுகிறது என்று அவரது அதிகாரி லோக்மன் அப்துல் கானி நேற்று இரவு மலேசியாகினிக்குத் தெரிவித்தார்.

இரத்து செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்புகள் அசாதாரணமானது அல்ல. ஆனால், தெங்கு ரஸாலீயின் பத்திரிகையாளர் சந்திப்பு இரத்து செய்யப்பட்டதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் “தலையீடு” ஆகும்.

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த, தெங்கு ரஸாலே போலிஸ் அனுமதி பெற வேண்டும் என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறியதாக மேற்கோள் காட்டிய செய்திகள் இணையதளங்களில் வெளியாகின.

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின், செந்தர இயங்குதல் நடைமுறைகள் (எஸ்ஓபி) ஏற்பாட்டாளர்களால் கடைபிடிக்கப்பட்டாலும், எந்தவொரு கூட்டமும் அனுமதிக்கப்படவில்லை என்றும், அப்படி நடந்தால் அவர்கள் போலீஸ் அனுமதி பெற வேண்டும் என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் கூறியதாகக் மலேசியாநவ் செய்தி போர்டல் மேற்கோள் காட்டியுள்ளது.

டாக்டர் நூர் ஹிஷாமின் அறிக்கையின் ஆதாரமாக மலேசியாநவ்வை மேற்கோள் காட்டி, செய்தி இணையதளங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை மிகவும் சுவாரஸ்யமானது, ஏனெனில் இந்தப் போர்டல் பெரும்பாலும் தேசியக் கூட்டணி அரசாங்கத்துடனும், பெர்சத்து கட்சியுடனும் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 20-ஆம் தேதி, தொடங்கப்பட்ட இந்தப் போர்ட்டலுக்கு, அப்துர் இரஹ்மான் கோயா தலைமை நிர்வாக அதிகாரியாகவும் (சி.இ.ஓ.) தலைமை ஆசிரியராகவும் உள்ளார். முன்பு அப்துர் இரஹ்மான் ஃப்ரி மலேசியா டூடே-இன் (எஃப்எம்டி) ஆசிரியராக இருந்தார், மேலும் அவர் அஸ்மினுக்கு நெருக்கமானவர் என்றும் அறியப்படுகிறது.

கேள்வி என்னவென்றால், அஸ்மினுக்கோ, பெர்சத்து அல்லது அரசாங்கத்தில் உள்ள எவருக்கோ, பத்திரிகையாளர் சந்திப்பில் தெங்கு ரஸாலே என்ன அறிவிப்பார் என்று தெரியுமா?

முன்னதாக நேற்று, இன்று மாலை 3 மணிக்கு, தலைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவதற்கான அழைப்பை ஊடகங்கள் ஏற்றுக்கொண்டன.

தெங்கு ரஸாலீயின் பத்திரிகையாளர் சந்திப்பை முறியடித்ததற்குக் காரணம், எஸ்ஓபியா அல்லது முக்கியமான அறிவிப்பை வெளியிடுவதிலிருந்து அவரைத் தடுக்கும் அரசியல் சதியா என்பதுதான் கேள்வி.

கடந்த ஆண்டு, பிரதமர் மஹியாடின் (முஹைதீன்) முஹமட் யாசின் மற்றும் அவரது கூட்டாளிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியே நடத்தியச் சதித்திட்டத்தைத் தொடர்ந்து, அரசியல் நெருக்கடி வெடித்தது, நிலைமையைக் காப்பாற்றுவதற்காக தெங்கு ரஸாலீயின் பெயர் பெரும்பாலும் “வெள்ளை வீரன்” (White Knight) எனக் குறிப்பிடப்படுகிறது.

தெங்கு ரஸாலீ தெரிவிக்க விரும்புவது முக்கியமானது மற்றும் அவசரமானது என்றால், அவர் அதை ஊடக அறிக்கைகள் மூலம் செய்ய முடியும். இல்லையெனில், மக்கள் மீண்டும் கு லியின் நேர்மை குறித்து கேள்வி எழுப்புவார்கள்.