25 பிஎன் எம்.பி.க்கள் ஜாஹிட் மீதான நம்பிக்கையை இழந்தனர் – நஸ்ரி

பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஜீஸ், தேசிய முன்னணியின் (பிஎன்) 42 எம்.பி.க்களில், பெரும்பான்மையினர் அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறினார்.

யாங் டி-பெர்த்துவான் அகோங் முன்னிலையில் ஆஜராக, செம்புராங் எம்.பி.யும் வெளியுறவு அமைச்சருமான ஹிஷாமுடின் ஹுசேன் அழைக்கப்பட்டால், அவருக்கு ஆதரவாக ’25 பி.என். எம்.பி.க்களின் ஆணை அறிவிப்பாக’, பிரமாணப் பத்திரம் (எஸ்டி) கையெழுத்திடப்பட்டதாக நஸ்ரி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“அகோங் கட்சித் தலைவர்களைச் சந்திக்க விரும்புவதை அறிந்தபோது, ​​நான் இனி ஜாஹிட்டை நம்புவதாக இல்லை.

“அக்டோபரில், பி.என். நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமராக அன்வர் இப்ராஹிமை ஆதரிப்பதாகத் தவறான தகவல்களை ஜாஹிட் அகோங்கிற்கு அளித்தனர்.

“நாங்கள் அன்வர் அல்லது டிஏபியை ஆதரிக்கவில்லை என்ற உண்மையை ஹிஷாமுடின் சொல்வார் என்று நான் நம்புகிறேன்,” என்று நஸ்ரி மலேசியாகினியிடம் கூறினார்.

எஸ்டி-யில் எத்தனை அமைச்சரவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டார்கள் என்பதை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

எஸ்டி ஹிஷாமுடினைப் பிரதமராக ஆதரிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபரில், அன்வாருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்து, அகோங்கிற்கான ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டதாக ஜாஹிட் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடிதம் போலியானது என்று ஜாஹித்தின் அலுவலகம் பின்னர் கூறியது, ஆனால் முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளர் அன்னுவார் மூசா வேறுவிதமாகக் கூறினார்.