இனம் மற்றும் மதம் என்ற அடிப்படையில் பிளவுபடாது, இலங்கையில் உள்ள அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைக்கக்கூடிய ஒரு சட்டத்தை இந்த நாட்டில் உருவாக்குவதே தமது பொறுப்பு என ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல்வேறு வகையிலும் சர்ச்சைக்குள்ளான பௌத்த தேரராக விளங்கும் கலகொடஅத்தே ஞானசார தேரர், இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டமை, சிறுபான்மை மக்கள் மத்தியில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.கலகொடஅத்தே ஞானசார தேரர் ஆறு வருட சிறை தண்டனை பெற்று, பின்னர் பொதுமன்னிப்பு பெற்றவர்.
இந்தச் செயலணியில் தமிழர்கள் சேர்க்கப்படாததும் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது.
இலங்கையில் எதாவது ஒரு விடயத்தை ஆரம்பிக்கும் போது, அதில் சிங்களவர்கள் இருக்கின்றார்களா, தமிழர்கள் இருக்கின்றார்களா அல்லது முஸ்லிம்கள் இருக்கின்றார்களா என ஆராய்வதாகவும், அது தேவையற்ற ஒன்று எனவும் அவர் கூறுகின்றார்.
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இடையிலான பிரச்னைகள்
நாட்டிலுள்ள தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான பிரச்னைகள் குறித்து தான் நன்கறிவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அதேபோன்று, மத ரீதியில், பௌத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் தொடர்பில் தாம் அறிந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
மத மாற்றத்தை தடுத்து நிறுத்துவதற்காக சட்டமொன்று கொண்டு வரப்பட்ட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அவ்வாறான சட்டமூலம் ஒன்றையேனும் இன்று வரை கொண்டு வர முடிந்ததா என அவர் கேள்வி எழுப்புகின்றார்.
இந்துக்களை மதம் மாற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்திய போதிலும், அதனை நிறுத்த இன்று வரை முடியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த பிரச்னை குறித்து, இன்று தமிழ் கட்சிகள் கூட எவ்வித கருத்துகளையும் வெளியிடுவதில்லை. இவ்வாறான பின்னணியில், அந்த பிரச்னைகள் குறித்து தாம் கருத்து வெளியிட ஆரம்பிக்கும் போது, தம்மை இனவாதிகளாகவும், மதவாதிகளாகவும் சிலர் அடையாளப்படுத்தியுள்ளதாக கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவிக்கின்றார்.
கலகொடஅத்தே ஞானசார தேரர் (இடது), ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க மற்றும் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் பேராசிரியர் சுமேத சிறிவர்தன.
கலகொடஅத்தே ஞானசார தேரர் (இடது), ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க மற்றும் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் பேராசிரியர் சுமேத சிறிவர்தன.
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் தமிழ் பிரதிநிதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது என ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கூறுகின்றார்.
ஆங்கிலயர்கள், போர்த்துகேயர்களினால் கொண்டு வரப்பட்ட சட்டங்களே இன்றும் நாட்டில் அமலில் உள்ளதாகவும், அதனை மாற்றி, இலங்கைக்கு ஏற்ற வகையிலான சட்டத்தை உருவாக்குவதே தற்போதைய கட்டாயம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
திறமையானவர்கள் யாராயினும், அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
தமிழர்கள் ஏன் இந்தச் செயலணியில் சேர்க்கப்படவில்லை?
தமிழர்கள் இந்த செயலணியில் இணைத்துக்கொள்ளப்படாமைக்கான காரணத்தையும், செயலணியின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதன்போது தெரிவித்தார்.
”யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர்கள், கண்டி தமிழர் ஒருவரை இணைத்துக்கொள்வதற்கு விருப்பம் கிடையாது. மற்றுமொரு தரப்பு வேறொரு விடயத்தை கூறும். இந்த நபர் அமைப்புக்களும் தொடர்புப்பட்டுள்ளார். இவர் ‘ரோ’ அமைப்பைச் சேர்ந்தர், இவர் சி.ஐ.ஏ அமைப்பை சேர்ந்தவர் என கூறுவார்கள். ஓர் இனத்திற்குள்ளேயே ஒற்றுமை இல்லாத பின்னணியில், இவ்வாறான செயலணிக்கு நபர்களை தெரிவு செய்யும் போது மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும். நாம் எமது மனதில் ஏனையோரை பிரித்து பார்க்க மாட்டோம். அனைவரும் ஓர் இனத்தவர்கள் என்றே பார்ப்போம். தமிழ் சகோதரர்களும் எமது சகோதரர்கள் என்றே பார்ப்போம். முஸ்லிம் சகோதரர்களும் எமது சகோதரர்கள். இதனை பிரித்து வைத்துக்கொண்டு, பிரச்னையை ஏற்படுத்துவோருக்கே பிரச்னை எழுந்துள்ளது. நாம் ஒரு நாடு, ஒரு இனமாக இருப்போம்.” என கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவிக்கின்றார்.
இனம், மதம், மாகாணம் அடிப்படையிலான பிளவுகள் காரணமாகவே, இந்த நாட்டிலுள்ள இளைய சமுதாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
எனினும், இந்த புதிய திட்டத்தினால் இளைய சமூதாயத்திற்கு விசேட இடமொன்று வழங்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
இலங்கை தேசிய கொடி
நாட்டில் தற்போதிருப்பது ஒரு சட்டமா என்பது தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு பதிலாக, தாம் அந்த செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டமை குறித்தே அனைவரும் பேசி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
நாட்டில் இனம், மதம் மற்றும் மாகாணங்களை அடிப்படையாகக் கொண்ட பல சட்டங்கள் காணப்படுவதை பலரும் அறிவார்கள்.
இவ்வாறு காணப்படுகின்ற சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்பதனை பலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
இனம், மதம், ஜாதிகளை அடிப்படையாகக் கொண்டு சட்டங்களை நிறைவேற்றாதும், வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சட்டங்களை நிறைவேற்றாதும் விதத்தில் செயற்படவுள்ளதாக அவர் கூறுகின்றார்.
மக்கள் பிரிவொன்றிற்கு, மதம் அல்லது அரசியல் கட்சிகளின் பிரிவுகளுக்கு அப்பாற் சென்று, நாட்டை முன்னிலைப்படுத்தி செயற்படுவார்களேயானால், அவ்வாறான நாட்டின் சட்ட எல்லையை அமைப்பதற்கு அனைவரது கருத்துகளையும் பெற்றுக்கொள்ள தயார் என அவர் குறிப்பிடுகின்றார்.
தாம் சட்ட வல்லுநர்கள் கிடையாது என கூறிய அவர், சட்ட வல்லுநர்களுக்கு அப்பாற் சென்று இந்த பிரச்னை எவ்வாறு கையாளப்படுகின்றது என்பது குறித்தே அவதானிப்பதற்கே தம்மிடம் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இந்த சட்டங்கள் நாட்டில் உரிய வகையில் செயற்படாமையினாலேயே, தாம் பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தாம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுவதற்கு அதுவே காரணம் என கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவிக்கின்றார்.
நன்றி BBC