1எம்டிபி விசாரணை – ஊழலில் நஜிப்பின் ஆர்வம் அதிகம்

பணமோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்கு விசாரணையில் 1எம்டிபியின் முன்னாள் தலைவர் பக்கே சலே வாக்கு மூலம் அளிக்கையில், தான் குறுஞ்செய்தி வழி அனுப்பிய எச்சரிக்கைகளை நஜிப் புறக்கணித்தாக  உயர்நீதிமன்றத்தில் கூறினார்.

2009 அக்டோபரில் 1எம்டிபியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு நஜிப்பிற்கு அந்த குறுஞ்செய்தியை  அனுப்பியதாக அவர் கூறினார்.

“நிர்வாகத்திற்கு இயக்குநர்கள் குழுவால் அறிவுறுத்தப்பட்ட பல விஷயங்களை நான் அவரிடம் தெரிவித்தேன், ஆனால் அதை பின்பற்ற ல்லை,” என்று அவர் கூறினார்.

“நிர்வாகத்தின் நிதி முறைகேடு குறித்தும் மற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்வது பற்றி என் மனதில் தோன்றவில்லை, ஏனெனில் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு எனது குறுஞ்செய்தி மூலம் நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டது போதும் என்று கருதினேன்.”

“எனது குறுஞ்செய்திக்கு அவர் பதிலளிக்காததால் எனது கவலைகள் அவரது  கவனத்தை ஈர்க்கவில்லை என்பதால், அவர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், எனக்குத் தெரியாமல் ஏதோ தவறு நடந்து வருவதாகவும் நான் உணர்ந்தேன்.”

அத்தகைய குறுஞ்செய்திகளுக்கு நஜிப் பதிலளிக்காதது “அசாதாரணமானது” என்று  வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராமின் கேள்விக்கு, பக்கே உறுதியாக பதிலளித்தார்.

குட் ஸ்டார் லிமிடெட் எனப்படும் நிறுவனத்திற்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணப் பரிமாற்றம் செய்ததில் அவர் மகிழ்ச்சியடையவில்லை . பரிமாற்றம் குறித்து தன்னுடனும் மற்ற இயக்குநர்களுடனும் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்றார் அவர்.

1எம்டிபி, 2009 இல், பெற்றோசவூதி இன்டர்நேஷனல் லிமிடெட் அல்லது பிஎஸ்ஐ உடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டதாகவும், ஒப்பந்த விதிமுறைகளின் கீழ், அந்த முயற்சிக்கு US$1 பில்லியன் செலவு செய்ததையும்  நீதிமன்றம் விசாரணையில் தெரியவந்தது.

1எம்டிபி-பிஎஸ்ஐ கூட்டுக் கணக்கில் US$1 பில்லியன் டெபாசிட் செய்யப்பட வேண்டும், ஆனால் US$300 மில்லியன் மட்டுமே கணக்கில் மாற்றப்பட்டது. குட் ஸ்டாரின் தப்பியோடிய தொழிலதிபர் லோ டேக் ஜோ அல்லது ஜோ லோவால்தான் இது ஏற்பட்டது என்று பின்னர் தெரியவந்தது.

2015 ஆம் ஆண்டு சிலதடவைகள் 1எம்டிபியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஷாஹ்ரோல் அஸ்ரால் இப்ராஹிம் ஹல்மியை சந்தித்ததாக பக்கே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

“அந்த நிதியை மாற்றுவதற்கான அதிகார ஆணையை முன்னாள் பிரதமர் நஜிப் பெற்றிருப்பதாக ஷாஹ்ரோல் என்னிடம் கூறினார்.”

“இருப்பினும், அவர்  கூறியதை ஆதரிக்கும் எந்த ஆவணத்தையும் என்னிடம் காட்டவில்லை,” என்று பக்கே கூறினார்.

1 பில்லியன் அமெரிக்க டாலர் பிஎஸ்ஐ கூட்டு முயற்சியில் நஜிப் ‘திடமான ஆர்வம்’ காட்டினார்

செப்டம்பர் 18, 2009 அன்று 1எம்டிபி இயக்குநர்கள் குழு கூட்டத்திற்கு சற்று முன்பு அவர் நஜிப்புடன் பேசியதாகவும் பக்கே சாட்சியமளித்தார்.

கூட்டத்தில் ஜோ லோ இருந்ததாகவும் அவர் கூறினார்.

“ஜோ லோ கலந்துகொள்வது வித்தியாசமாக இல்லை, ஏனெனில் அவர் முன்பு திரெங்கானு முதலீட்டு ஆணையம் வழிநடத்தல் குழு கூட்டங்களில் கலந்து கொண்டார் என்று பக்கே கூறியுள்ளார்.

“கூட்டம் தொடங்கும் முன், ஜோ லோ தனது கைப்பேசியைக் என்னிடம் கொடுத்து, ‘நஜிப் உங்களுடன் பேச விரும்புகிறார்” என்று கூறினார்.

சவூதி அரேபியாவுடனான அரசாங்கத்திற்கு (G2G) முன்முயற்சியாக இருந்ததால், “இந்த முன்மொழிவை PSI கூட்டு முயற்சி இயக்குநர்கள் குழு விரைவில் பரிசீலித்து ஒரு முடிவை உறுதிசெய்ய விரும்புவதாக” நஜிப் தன்னிடம் கூறியதாக அவர் கூறினார்.

“கூட்டு முயற்சியில் கையெழுத்திடும் விழாவை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் நஜிப்  கூறினார்.

“தொலைபேசி உரையாடலில், முதலீட்டை விரைவாகத் தொடர விரும்புவதில் அவர் வலுவான ஆர்வத்தைக் காட்டினார்”.

பிப்ரவரி 2011 மற்றும் டிசம்பர் 2014 க்கு இடையில் அவரது ஆம்பேங்க் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட ரிம2.28 பில்லியன் தொகையான 1எம்டிபி நிதியில் பணமோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய 25 குற்றச்சாட்டுகளின் பேரில் நஜிப் மீது விசாரணை நடந்து வருகிறது.

நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேரா முன் இந்த விசாரணை தொடர்கிறது.

-freemalaysiatoday