மலாய்க்காரர்களுக்கான மகாதீரின் புதிய கட்சியை அன்வார் நிராகரித்தார்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையில் நேற்று  புத்ராஜெயாவில் தொடங்கப்பட்ட மலாய்-முஸ்லிம் அடிப்படையிலான புதிய கூட்டணியை எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நிராகரித்துள்ளார்.

கூட்டணி அமைப்பது குறித்து உரையாற்றிய அவர், மலாய்-முஸ்லிம் சமூகத்திற்கு உதவ மகாதீருக்கு 22 மாதங்கள் இருந்ததையும்  சுட்டிக்காட்டினார்.

“அத்தகைய முயற்சியை நான் ஆதரிக்கவில்லை, ஏனென்றால் அவர் உண்மையிலேயே மலாய்-முஸ்லிம்களைப் பாதுகாக்க விரும்பினால், தனது 22 மாதங்களில் (இரண்டாவது முறையாக பிரதமராக) அவர் உதவியிருக்க வேண்டும்.”

“ஆனால் அவர் தேர்ந்தெடுத்த மலாய்க்காரர்கள் உண்மையில் மலாய் உணர்வுகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என்று அன்வார் இன்று பாராளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்று முன்னதாக, “கெராக்கன் தானா ஆயர்” என்ற மலாய்-முஸ்லிம் கோட்பாட்டில் கவனம் செலுத்தும் புதிய அரசியல் கூட்டணியை மகாதீர் வெளியிட்டார்.

அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட மலாய் உறுப்பினர்களை மட்டுமே இந்த கூட்டமைப்பு உள்ளடக்கும் என்று அந்த பெஜுவாங் தலைவர் கூறினார்.

“நாங்கள் மலாய்க்காரர்களை மட்டுமே அழைத்தோம், இனவெறி காரணமாக அல்ல, மாறாக வழிதவறிச் சென்ற மலாய் கட்சியான அம்னோவை எதிர்ப்பதில் எங்கள் முயற்சிகள் கவனம் செலுத்துகின்றன” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இந்த புதிய அரசியல் கூட்டணியை நான்கு அரசியல் கட்சிகள் ஆதரிக்கின்றன – அவை பெஜுவாங், புத்ரா, பெர்ஜாசா மற்றும் இமான்.

மகாதீரின் கூற்றுப்படி, புதிதாக உருவாக்கப்பட்ட இக்கட்சி விரைவில்   அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படும்.

தேர்தலை ஒத்திவைப்பதற்கான அம்னோவின் விண்ணப்பத்தை ஆர்ஓஎஸ் அங்கீகரித்ததைப் போல, அதிகாரப்பூர்வ கட்சியாக பதிவு செய்வதற்கான இயக்கத்தின் விண்ணப்பத்தை ஆர்ஓஎஸ் அங்கீகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.