பினாங்கு முதலமைச்சரும் ஆட்சி மன்ற உறுப்பினர்களும் சொத்துக்களை அறிவித்தனர்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கும் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்களும் இன்று கொம்தாரில் பகிரங்கமாக தங்களது சொத்து விவரங்களை அறிவித்தனர்.

என்றாலும் ஆட்சி மன்றத்தில் பேராளர் அல்லாத உறுப்பினர்களான மாநிலச் செயலாளர், மாநில நிதி அதிகாரி, மாநில சட்ட ஆலோசகர் ஆகியோர் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடவில்லை.

பினாங்கு பக்காத்தான் ராக்யாட் அரசாங்கத்தின் தனிப்பட்ட, அரசியல் கடப்பாட்டை அந்த அறிவிப்பு பூர்த்தி செய்வதாக லிம் சொன்னார்.

“திறமை, பொறுப்பு, வெளிப்படை ஆகிய கோட்பாடுகளுக்கு ஏற்ப நேர்மையுடன் கூடிய தூய்மையான தலைமைத்துவத்தை உறுதி செய்வதற்கு நான் அத்தகையை நேர்மையான நடவடிக்கைகளுக்குப் பரிந்துரை செய்தேன்”, என அவர் கொம்தாரில் நிருபர்களிடம் கூறினார்.

சுய நலனுக்கு வழி வகுத்து விடக் கூடும் என்பதால் அரசியல் கட்சிகள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான தடை, திறந்த டெண்டர் முறை, தகவல் சுதந்திரச் சட்டம், தனிப்பட்ட சொத்துக்களை அறிவிப்பது ஆகியவை அந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

ஆட்சி மன்ற உறுப்பினர்களுடைய துணைவியர்/துணைவர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரது சொத்துக்களும் அறிவிக்கப்படுமா என்னும் கேள்விக்குப் பதில் அளித்த லிம், ஒவ்வொரு நடவடிக்கையாக எடுக்கப்படும் என்றார்.

அரசியல்வாதிகளுடைய சொத்துக்களை பொது மக்கள் எப்படி உறுதி செய்ய முடியும் என்றும் லிம்-மிடம் வினவப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர் அனைத்து ஆட்சி மன்ற உறுப்பினர்களும் “சுயமாக எடுத்துக் கொண்ட நடவடிக்கை” எனச் சொன்னார்.

எல்லாச் சொத்து விவரங்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவான பாரத்தைப் பூர்த்தி செய்வது உட்பட அரசாங்க ஊழியர்கள் பயன்படுத்துகின்ற வழிமுறைக்கு ஏற்ப சொத்து விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்தப் பணிக்காக கேபிஎம்ஜி என்னும் கணக்காயர் நிறுவனத்தை சேர்ந்த சிறப்பு கணக்காயர் ஒருவர் தமது சேவைகளை புரோ போனோ அடிப்படையில் வழங்கியுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

மாநில அரசாங்கம் அந்த நிறுவனத்தை தேர்வு செய்துள்ள போது அந்தக் கணக்காயர் எந்த அளவுக்கு சுயேச்சையாக செயல்பட முடியும் என கேட்கப்பட்ட போது அந்தக் கணக்காயர் நிறுவனம் மூன்று  அடிப்படை கணக்காயர் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக லிம் சொன்னார்.

“வாடிக்கையாளரிடமிருந்து விடுபட்டிருப்பது, வாடிக்கையாளருடனோ அல்லது மாநில அரசாங்கத்துடனோ எந்த உறவுகளும் இல்லாதிருப்பது ஆகியவை அவற்றுள் அடங்கும்,” என அவர் வலியுறுத்தினார்.