வலிமை பெறும் வாக்குகள்

(கா. ஆறுமுகம்)

சிடி பவ்சிட் என்ற குட்டி பட்டிணத்தில் ஒரு 26 வயதுடைய கணினியியல் பட்டதாரி ஒருவன் தள்ளு வண்டியில் பழங்கள் விற்று வந்தான். இந்தப் பட்டினம் துனிசியா நாட்டின் தலைநகரத்தில் இருந்து 160 மைல் தூரத்தில் இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி நகராட்சிமன்ற அதிகாரிகள் உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்ததற்காக அவனது வண்டியைப் பறிமுதல் செய்ததோடு அவனை அறைந்தும் விட்டனர். முகமட் பவுசி என்ற அந்த இளைஞன், நடைமுறை அநியாயத்தை கண்டனம் செய்ய தீக்குளித்தான்.

இந்த துயர நிகழ்வு துனிசியாவின் அரசாங்கத்தைக் கவிழ்த்தது. மக்கள் தங்களால் ஓர் அளவுக்கு மட்டுமே அரசாங்க அநியாயங்களை பொறுத்துக் கொள்ள முடியும், அதற்குமேல் இயலாது என்பதை துனிசியா மட்டுமில்லாமல் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா நாடுகளில் மக்கள் எழுச்சி காட்டுகிறது. அதிகாரத்துவத்துடன் சுரண்டும் அரசாங்கத்தை மக்கள் விரட்டி மாற்றம், சீரமைப்பு, நீதி, நியாயம் கேட்டு அடிப்படை உரிமைகளை நடைமுறையாக்க போராடுகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பூச்சோங் ஆலய விவகாரத்தின்போது 52 வயதுடைய குணசேகரன் என்பவர் தீக்குளித்தபோது, மலேசியாவில் எழுந்த கண்டனம் ஓர் இனத்தின் குரலாக மட்டுமே ஒலித்தது. காரணம் மலேசிய நாட்டின் இன-மத பிரிவினைகள் மனிதர்களை பிளவுப்படுத்தி, இந்தியர்கள் சிறுபான்மை என்பதாலே அவர்களது உரிமைகளும் சிறியதாகவே இருக்கும் நிலை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது ஒரு கேவலமான சூழ்நிலை

மலேசியக் குடிமக்களுக்கு இனம் – மதங்களுக்கு ஏற்ற வகையில் கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள், உரிமங்கள், வாணிபம் இப்படி அன்றாட வாழ்க்கை வரை ஊடுருவி இன்று நாட்டு மக்களே முதல் தரம் என்றும் இரண்டாம் தரம் என்றும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்படபோவது இந்தியர்கள்தான். அம்னோவின் ‘கேத்துவானான் மிலாயு’ எனப்பட்ட இனவாதம் பெரும்பான்மை மக்களை ஆட்கொண்டு, அரசாங்கம் முழுமையும் பரவி உள்ளது. இதன் பாதிப்பு வரவர கூடிக்கொண்டேதான் போகும்.

அண்மையில் நடந்த சரவாக் மாநில தேர்தலில், இதை உணர்த்த சீனர்களின் பெரும்பான்மையான வாக்குகள்  எதிர்பார்க்காத அளவுக்கு எதிர்கட்சிகளுக்கு விழுந்தன. அடுத்து வரும் 13-ஆவது பொதுத்தேர்தலும் சீனர்கள் தொடர்ந்து பெரும்பான்மை வாக்குகளை எதிர்கட்சிகளுக்கு அளிப்பார்கள். அரசியல் வியூகத்தில் வேறு வழி கிடையாது.

அதேவேளை, மலாய்க்காரர்களிடையே உருவாகும் சில புதிய சிந்தனைகளை, மாற்றம் கொண்டு வரும் வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, அதனை மையமாக்கி இந்தியர்களின் அரசியல் நிலையை வலிமைப்படுத்தலாம்.

அந்நிலையில் இந்தியர்களின் வாக்குகள் எதிர்கட்சிகளுக்கு என்ற நிலை உருவாகும்போதுதான் அதற்கு வலிமையே உண்டாகிறது.