தொகுதிகளை மாற்றிக் கொள்ள மஇகா தயார், பழனிவேல்

அடுத்த பொதுத் தேர்தலில் தனக்கு ஒதுக்கப்படும் இடங்களை மற்ற பிஎன் உறுப்புக் கட்சிகளுடன் மாற்றிக் கொள்வதற்கு மஇகா தயாராக இருப்பதாக அதன் தலைவர் ஜி பழனிவேல் கூறியிருக்கிறார்.

மாற்றிக் கொள்வதற்கு நல்ல காரணம் இருந்தாலும் பிஎன் அந்த இடத்தில் வெற்றி  பெறுவதற்கு உதவும் என்றாலும் மஇகா எந்தத் தொகுதியையும் மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.

“நாங்கள் எங்களுடைத் தொகுதிகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். ஆனால் பிஎன் உறுப்புக் கட்சிகளுடன் இடங்களை மாற்றிக் கொள்வது மீது பேச்சு நடத்த நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்”, என அவர் குறிப்பிட்டார்.

அவர் இன்று கிள்ளானில் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு ஒன்றைத் தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

2008 பொதுத் தேர்தலில் மஇகா-வுக்கு ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளும் 19 மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளும் கொடுக்கப்பட்டதாக பழனிவேல் சொன்னார். அதில் மூன்று நாடாளுமன்ற இடங்களையும் ஏழு சட்டமன்றத் தொகுதிகளையும் அது வென்றது.

மஇகா இழந்த எல்லா இடங்களை மீண்டும் பிடிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இணையத்தின் வழி கட்சிக்கு எதிராக பொறுப்பற்ற சில தரப்புக்கள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை முறியடிப்பதற்கு அனைத்து மஇகா கிளைத் தலைவர்களும் தங்களுடைய தகவல் தொடர்பு தொழில்நுட்ப அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் துறை அமைச்சருமான பழனிவேல் கேட்டுக் கொண்டார்.

பொது மக்களுடைய புகார்களையும் மற்ற விஷயங்களையும் கவனிப்பதற்கு தங்கள் இணையத் தளங்கள் சுறுசுறுப்பாக இயங்குவதை கிளைத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

TAGS: