மாட் சாபு மீது நடவடிக்கை எடுப்பtது சட்டத் துறைத் தலைவரைப் பொறுத்தது என்கிறார் ஹிஷாம்

1950ம் ஆண்டு ஜோகூரில் புக்கிட் கெப்போங் துயரச் சம்பவத்தில் உண்மையான வீரர்கள் கம்யூனிஸ்ட்கள் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறியதாக சொல்லப்படும் அறிக்கை தொடர்பில் அவர் மீது நடவடிக்கை மீது எடுப்பதா இல்லையா என்பது சட்டத் துறைத் தலைவரைப் பொறுத்தது என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறுகிறார்.

மாட் சாபு என்றும் அழைக்கப்படும் முகமட் சாபு சம்பந்தப்பட்ட விவகாரம், சட்ட அடிப்படையிலானது என அவர் சொன்னார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றி சட்டத்துறைத் தலைவரே முடிவு செய்ய இயலும் என்றார் அவர்.

“அந்த விவகாரம் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியுமா என்பதை உறுதி செய்யக் கூடிய மனிதர், சட்டத்துறைத் தலைவரே,” என ஹிஷாம் சொன்னார்.

அவர் கிள்ளானில் நேற்று வண்ண விளக்குகள் விழாவையும் மெர்தேகா கொண்டாட்டங்களையும் தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

அந்த விவகாரம் தொடர்பான போலீஸ் புலனாய்வுப் பத்திரங்கள் ஆய்வுக்காக புக்கிட் அமானுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அரசாங்க வழக்குரைஞர் அலுவலகத்துக்கும் அது அனுப்பப்படும் என்றும் பினாங்கு போலீஸ் படைத் தலைவர் அயூப் யாக்கோப் கூறியதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மாட் சாபு அறிக்கை பாதுகாப்புக்கு மருட்டலை ஏற்படுத்தவில்லை என்பதால் அவரை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டிய தேவை இல்லை என்றும் ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.

பெர்னாமா