சடலம் குறித்த தகராற்றில் புதிய திருப்பம்

இஸ்லாத்துக்கு மதம் மாறியவர் எனக் கூறப்படும் லாரன்ஸ் செல்வநாதனுடைய சடலத்தை அவரது நண்பர்கள் சுயமாக செயல்பட்டு உடலைத் தகனம் செய்து விட்டதால் லாரன்ஸின் குடும்பத்துக்கு புதிய பிரச்னைகள் தோன்றியுள்ளன.

இறுதிச் சடங்களுக்காக லாரன்ஸின் சடலத்தை சிரம்பானில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குக் கொண்டு சென்ற அவரது நண்பர்கள் அந்த சடலத்தித் தகனம் செய்து அஸ்திய சிகாமட்டில் புதைத்து விடுவது என சொந்தமாக முடிவு செய்தனர்.

அந்த சூழ்நிலை, லாரன்ஸ் குடும்பத்தைச் சிக்கலில் மாட்டி விட்டது. நெகிரி செம்பிலான் இஸ்லாமிய விவகாரத் துறையின் சட்ட நடவடிக்கையை அந்தக் குடும்பம் இப்போது எதிர்நோக்கியுள்ளது.

அந்த விவரங்களை போர்ட்டிக்சன் சட்டமன்ற உறுப்பினரான ரவி முனுசாமி இன்று வெளியிட்டார்.

அவர் அந்தக் குடும்பத்துக்கும் இஸ்லாமிய சமயத் துறை அதிகாரிகளுக்கும் இடையிலான விவாதங்களில் நடுவராகப் பணியாற்றி வந்தார்.

நேற்று நள்ளிரவு லாரன்ஸ் குடும்பத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கும் ஷரியா நீதிமன்ற ஆணையை போலீசார் வழங்கியதாக ரவி சொன்னார்.

“அதன் காரணமாக லாரன்ஸ் தாயாருக்கு இருதய நோய் பிரச்னைகள் உருவாகியுள்ளன. அவர் இப்போது நோய்வாய்ப்பட்டுள்ளார். இன்னும் படுக்கையிலிருந்து எழவில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நள்ளிரவில் வர வேண்டாம் என நான் போலீசாருக்கு அறிவுரை கூறினேன். அவர்கள் ஏதும் விவாதிக்க வேண்டுமானால் பகலில் வர வேண்டும்,” என மலேசியாகினி தொடர்பு கொண்ட போது ரவி சொன்னார்.

சமய அதிகாரிகள், லாரன்ஸ் மூன்று நாட்களுக்கு முன்னதாக இஸ்லாத்துக்கு மதம் மாறியதாக காரணம் காட்டி, குடும்பத்தினர் அவரது இறுதிச் சடங்குகளையும் நல்லடக்கத்தையும் நடத்துவதை தடுத்து விட்டனர்.

 

‘மதம் மாறியதற்கான ஆதாரம் இல்லை’

அந்தச் சம்பவம் குறித்தும் அதனைத் தொடர்ந்து தாங்கள் எதிர்நோக்கும் சூழ்நிலை குறித்தும்  குடும்பத்தினர் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாக ரவி சொன்னார்.

இஸ்லாமிய சமய அதிகாரிகள் கூறிக் கொள்ளும் விஷயத்துக்கு போதுமான ஆதாரங்களை தாங்கள் பார்க்கவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

“எங்களுக்கு தெரிந்த வரை, மதம் மாற்ற நடவடிக்கையை முடிப்பதற்கு மூன்று வாரங்கள் தேவை. முதலில் ஒருவர் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.”

“முன்று நாட்களுக்கு முன்னதாக அவர் மதம் மாறியதாக அவர்கள் கூறுகின்றனர்.”

“இரண்டாவதாக அவர் சுண்ணத்துச் செய்யப்படவில்லை. அத்துடன் அவர் தமது குடும்பத்துக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.”

அவர் உண்மையில் மதம் மாறியிருந்தால் அது ஏன் அவருடைய மரணச் சான்றிதழில் காட்டப்படவில்லை ?”

“அவர் அப்படி மதம் மாறியிருந்தால் தேசியப் பதிவுத் துறையின் புள்ளி விவரக் களஞ்சியத்தில் அவர்கள் மதம் மாறிய தினமே பதிவு செய்திருக்க வேண்டும்.”

மூன்று நாட்களாகியும் எதுவும் இல்லை. ஆகவே முஸ்லிம் என அவர் அங்கீகரிக்கப்படவில்லை,” என ரவி சொன்னார்.

சமய விவகாரத்துறையின் நீதிமன்ற நடவடிக்கையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து குடும்பத்தினர் தற்போது தங்களது வழக்குரைஞருடன் விவாதித்து வருவதாகவும் ரவி குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான் இஸ்லாமிய விவகாரத் துறை இயக்குநருடன் தொடர்பு கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இது வரை பலனளிக்கவில்லை. அவர் கூட்டத்தில் இருப்பதாகக் கூறப்பட்டது.