சமூக ஊடகங்களில் பிறரை இழிவுபடுத்த வேண்டாம் என மாமன்னர் எச்சரிக்கை

சமூக ஊடகங்களை மற்றவர்களை இழிவுபடுத்தும் தளமாக மாற்ற வேண்டாம் என மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.

கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் என்பது பொறுப்புணர்வுடன் வர வேண்டும் என்று கூறிய அவர், சமூக ஊடகப் பயனர்கள் ஒருவருக்கொருவர் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் பழக வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்து வேறுபாடுகள் விரோதப் போக்கிற்கு ஒரு காரணமாகிவிடக் கூடாது. நாம் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம், ஆனால் நமது கருத்துக்களை மரியாதையான மற்றும் கண்ணியமான மொழியிலேயே வெளிப்படுத்த வேண்டும்.

நீங்கள் விமர்சிக்க விரும்பினால், அதை ஆக்கப்பூர்வமாகச் செய்யுங்கள். ஒருவரைத் திருத்த விரும்பினால், அதை சாமர்த்தியமாகவும் பரிவுடனும் செய்யுங்கள், என்று அவர் கூறினார்.

சில தரப்பினர் தங்களின் சொந்த நலன்களுக்காக சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தி, மற்றவர்களைத் தூண்டிவிடுவதற்கும், வெறுப்பைப் பரப்புவதற்கும், சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துவதற்கும் எதிராக, மாரா தொழில்நுட்ப​ பல்கலைகழக வேந்தருமான மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.

ஷா ஆலமில் இன்று நடைபெற்ற 105-வது மாரா தொழில்நுட்ப​ பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாரா தொழில்நுட்ப​ பல்கலைகழகத்தின் துணைவேந்தருமான சிலாங்கூர் மாநிலத்தின் தெங்கு பெர்மைசூரி தெங்கு பெர்மைசூரி நொராஷிகின் அவர்களும் கலந்து கொண்டார்.

செயற்கை நுண்ணறிவால் மாற்றியமைக்கப்பட்ட படங்கள் குறித்து மாமன்னர் எச்சரிக்கை

மற்றவர்களை இழிவுபடுத்தும் அல்லது சங்கடப்படுத்தும் நோக்கில் போலிப் படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதற்குச் செயற்கை நுண்ணறிவை (AI) தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வெறுப்புக்கும் அவதூறுக்கும் ஆளாகும் ஒவ்வொரு பெயருக்கும் முகத்திற்கும் பின்னால் ஒரு குடும்பம், கௌரவம் மற்றும் உணர்வுகளைக் கொண்ட ஒரு மனிதர் இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

நமது பெரியவர்களை மதிக்கவும், கண்ணியமாகப் பேசவும், மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் மற்றவர்களைத் தாழ்த்தி மதிப்பிடக் கூடாது என்றும் நாம் சிறுவயதிலிருந்தே கற்பிக்கப்படுகிறோம். ஏனெனில் நற்பண்புகள் என்பது வெறும் மரியாதையை மட்டும் சார்ந்ததல்ல, அது ஒரு நாட்டின் கண்ணியத்தின் உயிர்நாடியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்கு மத்தியில், சிலர் தங்களின் நற்பண்புகளை மறந்து, மற்றவர்களை இழிவுபடுத்தவும், திட்டவும், வார்த்தைகளால் தாக்கவும், அவமானப்படுத்தவும் தங்களுக்கு முழு சுதந்திரம் இருப்பதாக நினைக்கிறார்கள்.

இது தொடர்பாக, எந்தவொரு செய்தியையும் அதன் உண்மைத்தன்மையை முதலில் சரிபார்க்காமல், எளிதில் நம்பவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ வேண்டாம் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பொதுமக்களை வலியுறுத்தினார்.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களை முதலில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நமது அவசரம், நம்மை அவதூறுகளையும் வெறுப்பையும் பரப்பும் நபர்களாக மாற்றிவிடக் கூடாது என்றும் அவர் கூறினார்.

நமது தகவல் தொடர்பில் நாம் ஒரு முதிர்ந்த சமுதாயமாக மாறுவதை நான் காண விரும்புகிறேன்; கண்ணியத்துடன் நமது கருத்துக்களை தாராளமாக வெளிப்படுத்தவும், மற்றவர்களை இழிவுபடுத்தாமல் நமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் துணிச்சல் கொண்டவர்களாகவும், வெறுப்பை விதைக்காமல் நமது நம்பிக்கைகளைத் தற்காப்பதில் உறுதியானவர்களாகவும் நாம் இருக்க வேண்டும்.

மேலும், பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஜாலான் ஒத்மான் மாரா தொழில்நுட்ப​ பல்கலைகழக வளாகத்திற்கு, ‘துன் அர்ஷாத் அயூப் வளாகம்’ என மறுபெயரிடுவதற்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்தார். கடந்த 2022-ஆம் ஆண்டில் காலமான அர்ஷாத், 1967 முதல் 1975 வரை மாரா தொழில்நுட்பக் கழகத்தின் முதல் இயக்குநராகப் பணியாற்றியவர் ஆவார்.

 

 

 

-fmt