காவல்துறை அதிகாரிகளில் மின்னும் நட்சத்திரம் சுஹைலி

இராகவன் கருப்பையா – நம் நாட்டின் உயர்நிலை காவல்துறை அதிகாரிகளில் தற்பொழுது மின்னும் நட்சத்திரமாக வலம் வருபவர் மலேசிய எல்லை பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் முஹமட் சுஹைலிதான் என்றால் அது மிகையில்லை.

நேரடியான பேச்சு மற்றும் கண்டிப்பு மிக்க அணுகுமுறைக்கு பெயர் பெற்றவரான அவருக்கு நாடு தழுவிய நிலையில் பொது மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு பணி நிமித்தமாக சென்றிருந்த வேளையில் அங்கிருந்த சில அரசாங்க அதிகாரிகளின் போக்கை அவர் கண்டித்ததாக சொல்லப்படுகிறது.

அதன் தொடர்பான காணொளி பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டன. சுஹைலிக்கு எதிராக புகார் செய்யப்பட்டு, அச்சம்பவம் தற்பொழுது நீதிமன்றம் வரையில் சென்றுள்ளது எல்லாருக்கும் தெரியும்.

முன்னதாக, விமான நிலைய சம்பவம் தொடர்பாக கருத்துரைத்த அவர், “கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் செலயாங்கைப் போல இருப்பதை நான் விரும்பவில்லை,” என்றார்.

செலயாங்கில் உள்ள ‘பாசார் போரோங்’ எனும் மொத்த விற்பனை சந்தை மியன்மார் நாட்டினரின் ஆதிக்கத்தில் மாட்டிக் கொண்டுள்ளதைத்தான் சுஹைலி சுட்டிக்காட்டினார் என்று எல்லாருக்கும் தெரியும்.

அரசாங்கத் தரப்பு அமலாக்கப் பிரிவின் குளறுபடியானப் போக்கினால் அந்த வட்டாரமே தற்பொழுது ஒரு ‘மினி மியன்மார்'(மியன்மார் நாடு) போல சற்று மோசமாக உள்ளது ‘வெள்ளிடை மலை.’

கடந்த 2021ஆம் ஆண்டில் பினேங் மாநில காவல்துறைத் தலைவராகவும் 2 ஆண்டுகள் கழித்து கோலாலம்பூர் காவல்துறைத் தலைவராகவும் அவர் நியமனம் பெற்றிருந்தார்.

அதன் பிறகு புக்கிட் அமானில் குற்ற புலனாய்வுத்துறை இயக்குனராகவும் பொறுப்பேற்றிருந்த அவர் தமது கண்டிப்பானக் கொள்கைகளை ஆக்ககரமாக அமல் செய்து மிகச்சிறப்பாக சேவையாற்றினார்.

தமது இளமை காலத்தில் ஒரு சிறந்த  ஹொக்கி விளையாட்டாளராகத் திகழ்ந்த சுஹைலி, கோலாலம்பூர் குழவையும் பிறகு சிலாங்கூரையும் பிரதிநிதித்து அவ்விளையாட்டில் கோலோச்சினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹொக்கி பயிற்றுனர் பரமலிங்கத்திடமிருந்து நிறைய விஷயங்களை தாம் கற்றுக் கொண்டதாகவும் அவற்றில் ‘ஒழுக்கம்’ முக்கியமான ஒன்று எனவும் அண்மையில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கண்டிப்பு மற்றும் ஒழுக்கம் தொடர்பாக அந்த சமயத்தில் கிடைத்த அனுபவங்களைத்தான் தற்போது காவல்துறையில் தாம் அமலாக்கம் செய்வதாக சுஹைலி விவரித்தார்.

காவல்துறையில் அவர் ஒரு உயர் அதிகாரியாக உள்ள போதிலும் தம்முடைய தொலைபேசி அழைப்புகளுக்கு மதிப்பளித்து தம்முடன் அவர் உரையாடுவார் என பரமலிங்கமும் கூட அவரை பாராட்டியுள்ளார்.

Mr clean(தூய்மையானவர்) என்று அழைக்கப்படும் அந்த 54 வயது உயர் அதிகாரி, வியக்கத்தக்க வகையில் நாடலாவிய நிலையில் சாமானிய மக்களின் ஆதரவை அதிக அளவில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.