24 மில்லியன் ரிங்கிட் மோதிரம் தொடர்பில் படிப்படியான விவரங்களத் தருகிறது விளக்கக் கையேடு

பிரதமருடைய துணைவியுடன் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள பல மில்லியன் ரிங்கிட் பெறும் மோதிரம் பற்றிய பல தகவல்களை உள்ளடக்கிய 16 பக்க விளக்கக் கையேடு நாளை வெளியிடப்படும். அதனை பிகேஆர் கட்சியுடன் தொடர்புடைய Solidariti Anak Muda Malaysia (SAMM) என்னும் அரசு சாரா அமைப்பு ஒன்று தயாரித்துள்ளது.

அந்த கையேட்டில் உள்ள விவரங்கள் இணையத்தில் எளிதாகக் கிடைக்கின்றன. 24.45 மில்லியன் ரிங்கிட் பெறும் அந்த மோதிரம் பற்றிய தகவல் அம்பலமான முதல் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் அதில் அடுத்தடுத்து பட்டியலிடப்பட்டுள்ளன.

அந்த எஸ்ஏஎம்எம் அமைப்பின் தலைவரும் பிகேஆர் உறுப்பினரும் செகுபார்ட் என அழைக்கப்படுவருமான பத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரின் அந்த விவகாரத்தை அம்பலப்படுத்தினார்.

பிலிப்பீன்ஸில் ஒரு காலத்தில் புகழ் பெற்று விளங்கிய இமெல்டா மார்கோஸுடன் ரோஸ்மா மான்சோரை ஒப்பிட்டு அந்த கையேட்டுக்கு முன்னுரை வழங்கப்பட்டுள்ளது.

சுங்கத் துறை அதிகாரிகளும் அந்த விஷயத்துக்குப் பொறுப்பான அதிகாரிகளும் எஸ்ஏஎம்எம் அமைப்புக்கு கொடுத்ததாகக் கூறப்படும் ஆவணங்களையும் அந்த கையேடு கொண்டுள்ளது.

2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி நியூயார்க்கிலிருந்து ‘வைர மோதிரம்’ ஒன்று கொண்டு வரப்பட்டதைக் காட்டும் சுங்கப் பதிவுகளுடன் தகவல்கள் தொடங்குகின்றன.

ஜேக்கப் அண்ட் கோ சார்பாக மால்கா அமிட் என்னும் உள்ளூர் நிறுவனம் ஒன்று 23,458, 400 ரிங்கிட் பெறும் அந்த மோதிரத்தை இறக்குமதி செய்ததாக அது குறிப்பிட்டது. 2011ம் ஆண்டு தொடக்கத்தில் ஆடம்பரப் பொருட்களுக்கான வரிகள் அகற்றப்பட்டதால் அதற்கு வரி எதுவும் கொடுக்கப்பட வேண்டியதில்லை.

அந்த மோதிரத்தை மேன்மை தங்கிய டத்தின் படுக்கா ஸ்ரீ ரோஸ்மா மான்சோர் ( ‘H.E. Datin Paduka Seri Rosmah Mansor’ ) என்பவர் பார்வையிட வேண்டும் என்றும் அந்த சுங்க ஆவணத்தில் குறிக்கப்பட்டிருந்தது.

“இதில் முக்கியமான கேள்வி, பிரதமருடைய துணைவியார் பெயர் ஏன் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது ? ஆபரண சோதனையாளர் என்னும் பணியையும் அவர் செய்து வருகிறாரா ?” என அந்த விளக்கக் கையேடு வினவியது.

அதனை அடுத்து ஜுலை 13ம் தேதி செகுபார்ட், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்தார்.

அதன் விளைவாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள சரக்குப் பிரிவில் சோதனை நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த மோதிரம் வந்த நான்கு நாட்களுக்கு பின்னர் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டதைக் காட்டும் சுங்க ஆவணம் ஒன்று இணையத்தில் சேர்க்கப்பட்டது.

சுங்க அதிகாரி யார் என்ற மர்மம் ?

அந்த ஆவணத்தில் ‘அப்துல் நஜிட் அப்துல் ரசாக்” என்பவர் கையெழுத்திட்டுள்ளார். அவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகள் சோதனைப் பிரிவில் ஒர் அதிகாரி என அதில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் அப்துல் நஜிட், சுங்கத் துறையின் பயிற்சி, சேவைப் பிரிவில் பணியாற்றும் ஒர் அதிகாரி என அந்தத் துறையின் இணையத் தளம் கூறுவதாக விளக்கக் கையேடு சொல்கிறது.

“அந்த இணையத் தளம் பார்க்கப்பட்ட போது 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ம் தேதி கடைசியாக மேம்படுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த அதிகாரி புத்ராஜெயாவில் உள்ள பிரிவில் தான் வேலை செய்திருக்க வேண்டும். ஆகவே அந்த அதிகாரி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்கு மாற்றப்பட்டார் என அவர்கள் சொல்ல முடியுமா ?” என அது வினவியது.

அந்த ஆவணத்தில் சில இடங்களில் கையால் திருத்தப்பட்டிருந்தது.  ஏற்றுமதி தேதி ஏப்ரல் 20 ஆகவும்  விமானப் பயண எண் எஸ்கியூ 107 ஆகவும் மாற்றப்பட்டிருந்தது, ஆனால் அதற்குக் கீழ் ‘எந்தக் கையெழுத்துக்குக் குறியும் இல்லை.”

“ரோஸ்மாவைக் காப்பாற்றுவதற்காக அந்த கே2 ஆவணம் பயன்படுத்தப்பட்டதா என்னும் சந்தேகத்தை அது கிளப்பியுள்ளது,” என அந்தக் கையேடு குறிப்பிட்டது.

பின்னர் அது, அந்த விஷயம் முதலில் அம்பலமான இரண்டு வாரத்தில் அதாவது ஜுலை 29ம் தேதி அந்த மோதிரத்தைத் தாம் கொள்முதல் செய்ததாக கூறப்படுவதை ரோஸ்மா மறுத்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதே வேளையில் அந்த மோதிரம் ரோஸ்மாவின் புதல்வியின் மாமியாரான மைரா நாஸார்பாயேவுக்கு அந்த மோதிரம் சொந்தமானது என முன்னாள் பிகேஆர் உறுப்பினரான அனுவார் ஷாரி, டிவி3 தொலைக்காட்சி நிறுவனத்திடம் கூறினார்.

அத்தகைய மோதிரம் ஒன்று இருந்ததை பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ், நாடாளுமன்றத்தில் டிஏபி சிகாம்புட் உறுப்பினர் லிம் லிப் எங்-கிற்கு வழங்கிய  எழுத்துப்பூர்வமான பதில் உறுதி செய்ததையும் அந்தக் கையேடு குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அந்த மோதிரத்தை மலேசியாவில் யாரும் வாங்கவில்லை என்றும் அதற்கு உரிமை பெற்ற நிறுவனத்துக்கு அது திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்றும் நஸ்ரி குறிப்பிட்டிருந்தார்.

‘விரைவான அஸ்தமனம்’

இறுதியாக ஒரு விளக்கக் கையேட்டுக்கு ஒன்றரை ரிங்கிட்டுக்கு நன்கொடை அளிக்குமாறும் அதில்  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த அரசு சாரா அமைப்பின் வங்கிக் கணக்கு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியாரும் சம்பந்தப்பட்ட பல மில்லியன் ரிங்கிட் செலவுகளும் அதில் பட்டியலிடப்பட்டுள்ளது.

அவர்களுடைய அதிகாரத்துவ இல்லத்துக்கான பராமரிப்புச் செலவுகள், ரோஸ்மாவின் பெர்மாத்தா குழுமத்தின் கல்வித் திட்டங்களுக்கான செலவுகள், படங்களில் காணப்படுகின்ற ரோஸ்மா அணிந்துள்ள ஆபரணங்களின் விலைகளும் அதில் அடங்கும்.

அவற்றுள் ஜேக்கப் அண்ட் கோ 18 கேரட் வெள்ளைத் தங்க வளையலும் (அதன் எடை 65.77 கிராம்). ஹெர்மெஸ் ரக கைப்பைகளும் அடங்கும்.

“அம்னோ/பிஎன் மக்களுக்கு சிறப்புக் குறிப்பு, ரோஸ்மாவையும் நஜிப்பையும் தொடர்ந்து வைத்திருந்தால் அது அம்னோ/பிஎன்-னுக்கு விரைவான அஸ்தமனம் நிச்சயம்,” என அந்தக் கையேடு எச்சரித்துள்ளது.