அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி, ஆட்சியாளர்கள், சமயப் பிரச்னைகள் தொடர்பாக தாம் தெரிவித்த கருத்துக்கள் மீது உத்துசான் மலேசியா வெளியிட்ட செய்திகளுக்காக அதற்கு எதிராக அவதூறு வழக்குத் தொடரவிருக்கிறார்.
“உத்துசான் என்னுடைய கருத்துக்களை திரித்து மாற்றியதே முக்கியக் காரணமாகும். அந்த நாளேடு என்னை கர்வம் பிடித்தவன், பிடிவாதக்காரன், மரியாதை தெரியாதவன் என சித்தரித்தது,” என அந்த அரசியலமைப்பு நிபுணரான அப்துல் அஜிஸ் மலேசியாகினியிடம் கூறினார்.
ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை-ஹரப்பான் கம்யூனிட்டி சர்ச்சை மீது சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் இட்ரிஸ் ஷா வெளியிட்ட அறிக்கை குறித்து அப்துல் அஜிஸ் கருத்துத் தெரிவித்த பின்னர் அவருக்கு எதிராக அம்னோவும் அம்னோவுக்குச் சொந்தமான உத்துசானும் பல அரசு சாரா அமைப்புக்களும் ஊடகங்கள் வழியாக தாக்குதலைத் தொடங்கின.
மலாய் அரசர் அமைப்புக்கு எதிராக அப்துல் அஜிஸ் செயல்படுவதாக கூறிக் கொண்டு உத்துசான் செய்திகளை வெளியிட்டது.
உத்துசானுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடங்குமாறு தாம் தமது வழக்குரைஞர் ஹனிப்பா மைதினுக்குப் பணித்துள்ளதாகவும் அவர் சொன்னார். அதே வேளையில் தமக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள போலீஸ் புகார்கள் பற்றி ஆய்வு செய்யுமாறு இன்னொரு வழக்குரைஞரான சுல்கார்னாய்ன் லுக்மானை அவர் கேட்டுக் கொண்டார்.
உண்மையில் காலித் சாமாட் வழக்கில் நீதிமன்றம் செய்த முடிவைத் தொடர்ந்து அந்த யோசனையை என் வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். என்னுடைய அறிவாற்றல், நிபுணத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் நான் என் கருத்துக்களைத் தெரிவித்துள்ளேன்.”
“அவர்கள் தங்கள் எண்ணங்களைச் சொல்லாமலும் என்னுடன் ஏன் ஒத்துப் போகவில்லை என்பதை விளக்காமலும் என் மீது எல்லா வகையான குற்றச்சாட்டுக்களையும் அச்சுச் சாதனங்கள் வழியாக வெளியிடுகின்றனர்,” என அப்துல் அஜிஸ் குறிப்பிட்டார்.
பாஸ் கட்சியின் ஷா அலாம் எம்பி காலித் சாமாட் உத்துசானுக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கில் அவருக்கு 60,000 ரிங்கிட் இழப்பீடு கொடுக்குமாறு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.