அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கான தனது வியூகங்களைத் தயாரிக்கும் போது கட்சிக்காக தம்மையே தியாகம் செய்து கொள்வதற்கு தயாராக இருப்பதாக கெரக்கான் தலைவர் கோ சூ கூன் அறிவித்துள்ளார்.
“நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை இன்று நான் உங்களுக்குச் சொல்ல மாட்டேன். ஏனெனில் நான் இன்னும் சில சோதனைகளையும் ஒருங்கிணைப்பையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.”
“என்றாலும் கட்சியின் நன்மைக்காக நான் என்னைத் தியாகம் செய்து கொள்ள ஆயத்தமாக இருப்பதாக உங்களுக்கு உறுதி கூற விரும்புகிறேன்,” என 40வது கெரக்கான் ஆண்டுப் பொதுக் கூட்டத்தை நிறைவு செய்த போது கோ கூறினார்.
தேர்தல் விவகாரங்களில் கோ உறுதியற்ற போக்கை கடைப்பிடிப்பதாகக் கூறப்படுவது மீதும் அடுத்த தேர்தலில் கோ களமிறங்குவது குறித்த பல கேள்விகளினாலும் எழுந்துள்ள எதிர்ப்புக் குரல்களை சமாளிக்கும் பொருட்டு அவர் அவ்வாறு வாக்குறுதி அளித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
அடுத்த பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடும் சாத்தியத்தை கோ இது வரை உறுதி செய்யவும் இல்லை நிராகரிக்கவும் இல்லை. அவர் பிரதமர் துறை அமைச்சரும் ஆவார்.
தேர்தல் வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.
“சில சமயங்களில் சிலர் வேகமாகச் செல்ல விரும்புவர். சில சமயங்களில் சிலர் மெதுவாகச் செல்ல விரும்புவர். ஆனால் நான் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர் அனைவரும் வரவேண்டும் என விரும்புகிறேன்.”
கூட்டுத் தலைமைத்துவம் என்பதால் தம்மை தியாகம் செய்து கொள்வதற்கு முன்னர் பொருத்தமான ஏற்பாடுகளைத் தாம் செய்ய வேண்டியுள்ளதாகவும் கோ சொன்னார்.
“ஆகவே இன்று நான் உங்களுக்குச் சொல்லும் விஷயங்கள் இவை தான். எதிர்காலத்தில் இன்னும் பல அறிவிப்புக்களுக்காக காத்திருங்கள்.”
.