ஹிஷாமுடின்: மைகார்ட் மோசடி கவனத்தைத் திசைதிருப்பும் நாடகம்

உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், அக்டோபர் 12-இல், பாங்கி ஓய்வுதலம் ஒன்றில், இந்தோனேசியர்கள், வங்காளதேசிகள், கம்போடியர்கள் ஆகியோரடங்கிய சுமார் 240 பேருக்கு மைகார்ட் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலான கேள்விகளுக்குப் பதில் அளிப்பதைத் தவிர்த்தார்.

“இவை அரசியல் நெடிவீசும் விவகாரங்கள். மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இப்படிப்பட்ட கதைகள் கட்டிவிடப்படுகின்றன”, என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஹிஷாமுடின் கூறினார்.

இப்படிப்பட்ட விவகாரங்களை மாற்றரசுக் கட்சியினர் தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழுவிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்றாரவர்.

“அதுதான் சரியான இடம்.இப்படிப்பட்ட விவகாரங்களைக் கவனிப்பதற்காகவே அமைக்கப்பட்ட குழு அது. அதில் மாற்றரசுக் கட்சியினரும் இடம்பெற்றுள்ளனர்”, என்றாரவர்.

இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை எதுவும் நடைபெறுகிறதா என்று வினவியதற்கு அவரால் பதில் அளிக்க இயவில்லை. அது பற்றி தமக்கு தெரியாது என்றார்.

“ஏதாவது  நடந்திருந்தால்  விசாரணைகள் நடக்கத்தான் செய்யும். அப்படி எதுவும் இருந்தால் சரியான இடத்தில், சரியான நேரத்தில் அதைத் தெரியப்படுத்துவோம்.”

அவ்விவகாரத்தை அம்பலப்படுத்திய பாஸ் இளைஞர் பகுதி, குடியுரிமைக்குக் கைம்மாறாக  தேர்தலில் பிஎன்னுக்கு வாக்களிக்க உறுதிகூறிய அவ்வெளிநாட்டினர் ஜோகூரிலிருந்து ஆறு பேருந்துகளில் புத்ரா ஜெயாவுக்கு அழைத்துவரப்பட்டதாகக் கூறியது.

பேருந்துகளில் போலீஸ் அதிகாரிகள் இருந்ததாகவும் தேசிய பதிவுத் துறை அதிகாரிகள் வெளிநாட்டவருடன் காணப்பட்டதாகவும் அது கூறிற்று.

இதன் தொடர்பில் முதலில் ஊடகங்களிடம் பேச மறுத்த செப்பாங் மாவட்டப் போலீஸ் தலைவர், மறுநாள் வெளிநாட்டவர் “தொழில்முனைவர் பயிற்சி” பெறுவதற்காக பாங்கி சென்றதாக ஒரு விளக்கம் அளித்தார். இதை “நம்ப முடியாத கதை” என்றுகூறி பாஸ் இளைஞர் பகுதி நிராகரித்தது. 

தேசிய பதிவுத் துறையும் வெளிநாட்டவருக்கு மைகார்ட் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டதை மறுத்தது. அப்படிப்பட்ட திட்டம் எதிலும் தான் சம்பந்தப்படவில்லை என்றது கூறியது.