சிலாங்கூர் சுல்தான் வெளியிட்ட கட்டளை மீது சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி அறிக்கை விடுத்ததைத் தொடர்ந்து அவரை எம்சிஎம்சி என்ற மலேசிய பல்லூடக தொடர்பு ஆணையம் விசாரித்துள்ளது.
“மிங்குவான் மலேசியாவின் அவாங் சிலாமாட் தொடுத்த அழுத்தம் அதற்குக் காரணமாக இருக்கலாம்”, என அப்துல் அஜிஸ் இன்று காலை மணி 9.30க்கு மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள மின் அஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஆணையம் அதற்குப் பின்னர் மலேசியாகினியுடனும் தொடர்பு கொண்டது. இன்று பிற்பகல் 3.30க்கு இரு அதிகாரிகள் மலேசியாகினி அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்கள் மலேசியாகினி செய்தியாளர் ஜிமாடி ஷா ஓத்மானை ஒரு மணி நேரத்திற்கு மேல் விசாரித்தனர்.
அந்த விரிவுரையாளரை மேற்கோள் காட்டி அச்செய்தியை எழுதியது யார் என்றும் அச்செய்திக்கான தகவலை அச்செய்தியாளர் எப்படி பெற்றார் என்றும் கேட்டனர்.
எம்சிஎம்சி அதிகாரிகளுடனான சந்திப்பு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு மேல் நீடித்ததாக அப்துல் அஜிஸ் சொன்னார். கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு எதிராக புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எம்சிஎம்சி அதிகாரிகள் அவரை விசாரித்துள்ளனர்.
“எனது தனிப்பட்ட தகவல்கள் பற்றியும் வாழ்க்கைத் தொழில் பற்றியும் அவர்கள் வினவியதுடன் மலேசியாகினி வெளியிட்ட செய்தி சரியானதா என்றும் கேட்டனர்”, என்றார் அவர்.
சுக்ரி ஜமாலுதின், மஸ்லான் ஒஸ்மான் என்ற அந்த இரண்டு அதிகாரிகளும் தமது ஆய்வுத் துறைகள் பற்றியும் தமது கைத் தொலைபேசி பற்றியும் தகவல் தொடர்பு தொழில் நுட்ப ஆற்றல் பற்றியும் விசாரித்ததாகவும் அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.
அப்துல் அஜிஸ் மீதும் அந்த கல்வியாளருடைய கருத்துக்களை வெளியிட்ட மலேசியாகினி மீதும் லேசாக நடந்து கொள்வதாக எம்சிஎம்சி-யை உத்துசான் மலேசியாவின் ஞாயிறு பதிப்பான மிங்குவான் மலேசியாவில் வெளியான “அவாங் சிலாமாட்” பத்தியில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
நடப்பு விவகாரங்கள் மீது தங்கள் கருத்துக்களை அடையாளம் தெரிவிக்காமல் வெளியிடுவதற்கு உத்துசான் ஆசிரியர்கள் “அவாங் சிலாமாட்” என்னும் புனை பெயரைப் பயன்படுத்துகின்றனர்.
மலேசியாவில் “குடியரசு ஒன்று அமைக்கப்படுவதை வலியுறுத்தும்” அர்த்தத்தைக் கொண்ட செய்தியை வெளியிட்டதின் மூலம் மலேசியாகினி “வலை” விரித்துள்ள போதிலும் அது “விதி விலக்கு” பெற்றுள்ளதாகத் தோன்றுகிறது என நேற்று அவாங் சிலாமாட் தமது கருத்தில் கூறிக் கொண்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை நடத்திய சோதனை பற்றி சிலாங்கூர் சுல்தான் கட்டளை வெளியிட்டுள்ளது “வழக்கத்துக்கு மாறானது” என கடந்த வாரம் அப்துல் அஜிஸ் குறிப்பிட்டிருந்தார்.