மதம் மாற்றத்துக்கு எதிரான பேரணிக்கு ஆதரவு வழங்குவதற்கு பாஸ் நிபந்தனை விதிக்கிறது

“முஸ்லிம்களுடைய சமயத்தை பாதுகாக்கும்” பொருட்டு சனிக்கிழமை நடத்தப்படும் பேரணி- வெவ்வேறு சமயங்களைச் சார்ந்தவர்களை ஒருவர் மற்றொருவர் மீது தூண்டி விடாமல் இருந்தால் மட்டுமே பாஸ் அதற்கு ஆதரவளிக்கும்.

அத்தகைய பேரணிகள் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் உண்மையானப் பிரச்னைகளை மறைப்பதற்குப் பயன்படுத்தப்படுவதே அதற்குக் காரணம் என சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் டாக்டர் அப்துல் ரானி ஒஸ்மான் கூறினார்.

“நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படக் கூடிய தவறுகள் ஏதுமில்லாமல் ஒரு சமயத்தை இன்னொரு சமயத்துக்கு எதிராகத் தூண்டி விடுவது தவிர்க்கப்பட வேண்டும் என அவர் சொன்னார்.

“அத்தகைய நடவடிக்கைகள் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை மறைக்கவே உதவும். மற்ற தரப்புக்கள் மீது பழி போடுவதற்கு வழி வகுக்கும்,” என்றார் அவர்.

முஸ்லிம்களுடைய சமய நம்பிக்கையை வலுப்படுத்தும் எந்த முயற்சியையும் பாஸ் கொள்கை அளவில் ஆதரிப்பதாகவும் மெரு சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார். அதனால் சமூகமும் வலுவடையும் என்றார் அவர்.

“ஆனால் சமயம் எதிர்நோக்கும் ‘இனவாதம், மதச் சார்பற்ற போக்கு, பொருள் தேடும் போக்கு” ஆகிய ‘உண்மையான மருட்டல்கள்’ மீது பேரணி ஏற்பாட்டாளர்கள் கவனம் செலுத்துவதோடு அவற்றுக்குத் தீர்வுகளையும் காண வேண்டும்.”

சிலாங்கூர் மாநிலத்தில் வாழும் பல இன மக்களிடையே வேறுபாட்டை ஏற்படுத்துவதற்கு “குறிப்பிட்ட சில தரப்புக்களுடைய  செல்வாக்கிற்குப் பலியாகி விட வேண்டாம் என்றும் அவர் பேரணி ஏற்பாட்டாளர்களை எச்சரித்தார்.

“அத்தகைய நடவடிக்கைகள் பக்காத்தான் ராக்யாட்டை தாக்கும்  அரசியல் நோக்கத்தைக் கொண்டவை எனவும் சிலாங்கூர் பாஸ் எச்சரித்தது.

பேரணியிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு பாஸ் தனது உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அப்துல் ரானி, நாளை நிகழும் கட்சியின் மத்தியத் தலைமைத்துவக் கூட்டத்தில் அது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

அந்தப் பேரணியின் நோக்கம் ஆக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் மாறாக அழிவை எண்ணமாகக் கொண்டுள்ளது என்றும் பாஸ் சிலாங்கூர் துணை ஆணையாளர் காலித் சாமாட் கூறினார்.

“ஏற்பாட்டாளர்கள் கிறிஸ்துவ மயம் பற்றி மட்டுமே கவனம் செலுத்தினால் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் இடையில் உறவுகள் நலிவடையும். அப்போது மறைமுகமான நோக்கம் இருப்பதாகவும் தோன்றுகிறது”, ஷா  அலாம் எம்பி-யுமான அவர் குறிப்பிட்டார்.

“மற்றவர்களுடன் சண்டை போடுவதற்காக இஸ்லாம் நம்மை அனுப்பவில்லை என நாங்கள் கருதுகிறோம். நீதியை நிலை நிறுத்தி அனைவருக்கும் அமைதியைக் கொண்டு வரும் பொருட்டு நாம் அனுப்பப்பட்டுள்ளோம்.”