கூட்டரசின் அதிகாரத்துவ சமயம் என்ற நிலையிலிருந்து இஸ்லாத்தை அகற்றுவதற்கு பினாங்கில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட கிறிஸ்துவச் சதி என கடந்த மே மாதம் பெரிதாக பேசப்பட்ட விவகாரம் மீது எடுக்கப்பட்ட முடிவு தம்மை வியப்படையச் செய்யவில்லை என கத்தோலிக்க ஆயர் பால் தான் சீ இங் கூறுகிறார்.
“ஒன்றுமில்லாத விஷயங்கள் பெரிதுபடுத்தப்பட்ட இன்னொரு சம்பவம்” அது என்றும் அவர் சொன்னார்.
அந்த பினாங்கு விவகாரம் ‘மேல் நடவடிக்கை இல்லை’ என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில் குறிப்பிட்டுள்ளது பற்றி மலாக்கா ஜோகூர் கத்தோலிக்க திருச்சபையின் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.
“‘தவறான தகவல்களை வெளியிவோருக்கும்”, “வதந்திகளை பரப்புவோருக்கும்”, “விரும்பத்தகாத சக்திகளுக்கும்” எதிராக அதிகாரிகள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும் ஆயர் தான் கேட்டுக் கொண்டார்.
“அத்தகைய நபர்கள் ஒரு சமயத்தைச் சார்ந்தவர்களை மற்ற சமயங்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராகத் தூண்டி விடுகின்றனர். அதிகாரிகளுடைய அபத்தமான போக்கை சுட்டிக்காட்டும், சுயேச்சையாகச் சிந்திக்கக் கூடிய சட்டப் பேராசிரியர்களையும் மருட்டுகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் டமன்சாராவில் முஸ்லிம்கள் மதம் மாற்றம் செய்யப்படுவதாக கூறப்பட்டது தொடர்பில் சிலாங்கூர் சுல்தான் விடுத்த அறிக்கை மீது மரியாதைக் குறைவான கருத்துக்களைத் தெரிவித்ததாக கூறி அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரியை மலேசியப் பல்லூடக, தொடர்பு ஆணையம் விசாரித்துள்ளது பற்றி ஆயர் தான் அவ்வாறு குறிப்பிட்டார்.
“கலவரத்தை தூண்டுகின்றவர்களை பிடிக்காமல் கலவரம் செய்கின்றவர்களை சுட்டிக் காட்டும் மக்கள் மீது அரசாங்கம் பாய்வதாக மக்கள் இப்போது எண்ணுகின்றனர்”, என அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
“மக்களுடைய விவேகத்தை அதிகாரிகள் குறைவாக மதிப்பிடவும் கூடாது. மக்கள் பொறுமை தொடரும் எனவும் எண்ணக் கூடாது”, என்றும் அவர் எச்சரித்தார்.