இவ்வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள ஒரு சட்ட முன்வரைவு, மலேசியாவை எதேச்சதிகார ஆட்சி நடக்கும் இருண்ட காலத்துக்குக் கொண்டுசெல்லும் என்று மாற்றரசுக் கட்சி எம்பி என்.சுரேந்திரன் சாடியுள்ளார். அது, எந்தவொரு இரகசியத்தையும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் அரசு அதிகாரிகள் சிறையிடப்படுவார்கள் என எச்சரிக்கிறது என்றாரவர்.
குற்றவியல் சட்டத்துடன் சேர்க்கப்படவுள்ள இப்புதிய சட்டம் ஏற்கனவே கடுமையானதாக உள்ள அதிகாரத்துவ பாதுகாப்புச் சட்டத்தை (ஓஎஸ்ஏ) மேலும் கடுமையாக்கும் என்று பிகேஆர் உதவித் தலைவருமான சுரேந்திரன் கூறினார்.
அந்த உத்தேச திருத்தத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், “நவீன ஜனநாயகத்தில் இப்படிப்பட்ட சட்டம் கொண்டுவரப்பட்டதில்லை; இது ஒரு-கட்சி ஆட்சி நடத்தும் வட கொரியா போன்ற நாடுகளுக்கே பொருத்தமானது”, என்றார்.
“இந்தச் சட்டத்தின்வழி பிஎன் மலேசியாவை இருண்ட காலத்துக்குள் மேலும் இழுத்துச் சென்றுவிடும். எதற்கு ஜனநாயகத்துக்கு முரணான இப்படி ஓர் அடக்குமுறைச் சட்டம்? மக்களிடமிருந்து எதை மறைக்க விரும்புகிறார்கள்?”, என்றவர் வினவினார்.
ஓஎஸ்ஏ-இன்கீழ் அமைச்சர் அல்லது அவரால் நியமிக்கப்பட்டவரின் அத்தாட்சி பெற்ற பொருள்கள் மற்றும் ஆவணங்கள் மட்டுமே இரகசியமானவை என வகைப்படுத்தப்பட்டன. ஆனால், இப்போது குற்றவியல் சட்டத்தில் சேர்க்கப்படும் பிரிவு 203ஏ-இன்கீழ் எல்லாமே இரகசியமானவைதான் என சுரேந்திரன் கூறினார்.